ரஜினிகாந்த் பாராட்டு: உங்கள் அன்பான வார்த்தைகளுக்கு நன்றி தலைவா - ஜெயம் ரவி நெகிழ்ச்சி டுவீட்
|'பொன்னியின் செல்வன்-1' திரைப்படத்தை பார்த்த நடிகர் ரஜினிகாந்த் ஜெயம் ரவியை பாராட்டியுள்ளார்.
சென்னை,
கல்கியின் புகழ் பெற்ற "பொன்னியின் செல்வன்" நாவலை அடிப்படையாகக் கொண்டு மணிரத்னம் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் "பொன்னியின் செல்வன்". இதன் முதல் பாகம் கடந்த செப்டம்பர் 30-ஆம் தேதி வெளியானது. ஜெயம்ரவி, விக்ரம், கார்த்தி, சரத்குமார், பார்த்திபன், ஜெயராம், ஜஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல முன்னணி திரைப்பிரபலங்கள் நடித்துள்ள இப்படம் ரசிகர்கள் மத்தியில் பெரும் வரவேற்பை பெற்று வருகிறது.
இந்த நிலையில் 'பொன்னியின் செல்வன்' திரைப்படத்தில் ராஜராஜ சோழன் கதாபாத்திரத்தில் நடித்துள்ள ஜெயம் ரவியின் நடிப்பை நடிகர் ரஜினிகாந்த் பாராட்டியுள்ளார். இது தொடர்பாக ஜெயம் ரவி தன்னுடைய டுவிட்டர் பக்கத்தில் நெகிழ்ச்சி பதிவு ஒன்றை வெளியிட்டுள்ளார்.
அந்தப் பதிவில் அவர், "அந்த 1 நிமிட உரையாடல் எனது நாளை, எனது ஆண்டை சிறப்பாக மாற்றியது. மேலும் எனது சினிமா வாழ்க்கைக்கு ஒரு புதிய அர்த்தத்தை சேர்த்துள்ளது. உங்கள் அன்பான வார்த்தைகளுக்கும் குழந்தைத்தனமான உற்சாகத்திற்கும் நன்றி தலைவா.
'பொன்னியின் செல்வன்' திரைப்படமும் எனது நடிப்பும் உங்களுக்கு பிடித்தது என்பதை அறிந்து நான் மிகவும் மகிழ்ச்சியடைந்தேன், பணிவாகவும் ஆசீர்வதிக்கப்பட்டதாகவும் உணர்கிறேன் என்று கூறியுள்ளார்.