'நிதி திரட்டும் கலைநிகழ்ச்சியில் ரஜினி, கமல்' - கார்த்தி தகவல்
|நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக சங்கத்திற்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளதாக கார்த்தி கூறினார்.
சென்னை,
தென்னிந்திய நடிகர் சங்கத்தின் 68வது பொது குழு கூட்டம் இன்று காலை 10 மணியளவில் ஆரம்பமானது. முன்னதாக செயற்குழு கூட்டம் நிறைவடைந்தது. தற்போது நடிகர் சங்க தலைவர் நாசர் தலைமையில் நடைபெற்று வரும் பொது குழு கூட்டத்தில் பொதுச்செயலாளர் விஷால் துணைத்தலைவர் கருணாஸ் மற்றும் நடிகர் நடிகைகள், நாடக நடிகர்கள் பலர் கலந்து கொண்டனர்.
இந்த பொதுக்குழு கூட்டத்தில் முக்கிய விஷயங்கள் குறித்து விவாதிக்கப்பட்டது. கேரளாவில் ஹேமா கமிட்டி அறிக்கை வெளியாகி பெரும் சர்ச்சையை ஏற்படுத்தி இருக்கும்நிலையில், தென்னிந்திய நடிகர் சங்கம் சார்பில் ஏற்கனவே 2019-ம் ஆண்டு அமைக்கப்பட்ட விசாக கமிட்டியின் கூட்டம் கடந்த 4-ம் தேதி நடைபெற்று முடிந்தது. இந்த கூட்டத்தில் 7 முக்கிய தீர்மானங்கள் நிறைவேற்றப்பட்டன.
இந்நிலையில், பொது குழு கூட்டத்தில் பேசிய கார்த்தி, நடிகர் சங்க கடனை அடைப்பதற்காக நடத்தப்படும் கலைநிகழ்ச்சியில் ரஜினிகாந்த், கமல்ஹாசன் ஆகியோர் சேர்ந்து நடிப்பதாகவும், நடிகர் விஜய் கடனாக இல்லாமல் நிதியாக சங்கத்திற்கு ரூ.1 கோடி கொடுத்துள்ளதாகவும் கூறினார். மேலும், பாலியல் அத்துமீறல்கள் தொடர்பாக பெண்கள் தைரியமாக புகார் அளிக்க வேண்டும் என்றும் கூறினார்.
அடுத்த ஆண்டு நடிகர் சங்கத்தின் பொதுக்குழு கூட்டமானது புதிய கட்டிடத்தில் நடைபெறும் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.