< Back
சினிமா செய்திகள்
மீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி - கமல்... ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் வெற்றி படங்கள்..!
சினிமா செய்திகள்

மீண்டும் நேருக்கு நேர் மோதும் ரஜினி - கமல்... ஒரே நாளில் ரீ-ரிலீஸ் ஆகும் வெற்றி படங்கள்..!

தினத்தந்தி
|
26 Nov 2023 5:41 PM IST

ஒரே நாளில் ரஜினி, கமல் நடித்த 2 வெற்றி படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளன.

சென்னை,

கடந்த 2001-ம் ஆண்டு இயக்குனர் சுரேஷ் கிருஷ்ணா இயக்கத்தில் கமல்ஹாசன் இரட்டை வேடத்தில் நடித்து வெளியான திரைப்படம் 'ஆளவந்தான்'. தயாரிப்பாளர் தாணுவின் 'வி கிரியேஷன்ஸ்' தயாரித்திருந்த இப்படத்தில் ரவீனா டாண்டன், மனீஷா கொய்ராலா, சரத்பாபு உள்ளிட்ட பலர் நடித்திருந்தனர். இப்படம் தமிழ் மற்றும் இந்தியில் வெளியாகி கலவையான விமர்சனங்களைப் பெற்றது.

இதற்கிடையே 22 வருடத்திற்கு பிறகு 'ஆளவந்தான்' திரைப்படம் வரும் டிசம்பர் 8-ந்தேதி ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பாளர் தாணு கடந்த சில தினங்களுக்கு முன்பு அறிவித்திருந்தார். இந்த திரைப்படம் டிஜிட்டல் வெர்ஷனில் உலகம் முழுவதும் 1,000 திரையரங்குகளில் வெளியாக உள்ளதாக அறிவிப்பு வெளியாகியது.

இந்நிலையில் நடிகர் ரஜினிகாந்த் நடிப்பில் கடந்த 1995-ஆம் ஆண்டு வெளியான 'முத்து' திரைப்படமும் அதே நாளில் வெளியாக உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. கே.எஸ்.ரவிகுமார் இயக்கத்தில் வெளியான இந்த படத்தில் மீனா, சரத்பாபு, ராதாரவி, ரகுவரன், செந்தில், வடிவேலு என பெரிய நட்சத்திர பட்டாளமே நடித்திருந்தனர். இசையமைப்பாளர் ஏ.ஆர்.ரகுமான் இந்த படத்திற்கு இசையமைத்திருந்தார்.

'தென்மாவின் கொம்பத்' என்னும் மலையாள படத்தின் ரீமேக்காக இருந்தாலும், தற்போதுவரை இந்த படத்திற்கு ரசிகர்களிடம் வரவேற்பு உள்ளது. ரசிகர்கள் மத்தியில் நீங்கா இடம்பெற்றுள்ள 'முத்து' திரைப்படம் வருகிற டிசம்பர் மாதம் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக படத்தின் தயாரிப்பு நிறுவனம் ஏற்கனவே அறிவித்திருந்தது.

இந்த நிலையில் ஆளவந்தான் படம் ரிலீசாகும் டிசம்பர் 8ம் தேதி 'முத்து' திரைப்படமும் ரீ-ரிலீஸ் செய்யப்பட உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இரண்டு படங்களும் ஒரே நாளில் வெளியாக உள்ளதால் ரஜினி-கமல் ரசிகர்கள் மகிழ்ச்சியில் உள்ளனர்.

மேலும் செய்திகள்