'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என கூறிய விஜய் ரசிகரை புரட்டி எடுத்த ரஜினி ரசிகர்கள்
|சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க என கூறிய விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்திய சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.
சென்னை,
இன்று ஜெயிலர் படம் வெளியாகி இருக்கும் நிலையில் ரஜினி ரசிகர்கள் அதை தியேட்டர்களில் கொண்டாடி வருகின்றனர். கிட்டத்தட்ட இரண்டு வருடங்களுக்கு பிறகு வரும் ரஜினி படம் என்பதால் அவரது ரசிகர்கள் பெரிய அளவில் எதிர்பார்ப்பில் இருந்தனர். அதை பூர்த்தி செய்யும் வகையில் படம் இருப்பதாக விமர்சனங்களும் வந்துகொண்டிருக்கிறது.
இந்நிலையில் சென்னையில் பிரபலமான தியேட்டர் ஒன்றில் விஜய் மற்றும் ரஜினி ரசிகர்கள் இடையே தியேட்டரில் சண்டை நடந்திருக்கிறது. ரஜினி ரசிகர்கள் பலரும் சேர்ந்து விஜய் ரசிகரை தாக்கி இருக்கும் வீடியோவும் தற்போது வைரல் ஆகி வருகிறது.
ஏற்கனவே ஜெயிலர் இசை வெளியீட்டு விழாவில் ரஜினி சொன்ன காக்கா-கழுகு கதை விஜய்யை தாக்கி தான் பேசினார் என சர்ச்சை எழுந்து இரண்டு நடிகர்களின் ரசிகர்களும் மோதிக்கொண்டனர். இந்த நிலையில் தான் தற்போது இப்படி ஒரு சம்பவம் நடந்து இருக்கிறது.
ஜெயிலர் படம் பார்க்கும்போது 'ரஜினி ஒழிக' என கத்தியதால் தான் சண்டை வெடித்து இருக்கிறது. மேலும் 'சூப்பர் ஸ்டார் விஜய் வாழ்க' என்றும் கூறியதாலும், தியேட்டரில் இருந்து வெளியில் வந்த பிறகு விஜய் ரசிகரை ரஜினி ரசிகர்கள் சூழ்ந்து கொண்டு தாக்குதல் நடத்தி இருக்கின்றனர். இந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது.