ராகவா லாரன்ஸின் 25வது படம் - போஸ்டர் வெளியீடு
|தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸின் 25வது படம் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாகியுள்ளது.
சென்னை,
தமிழ் புத்தாண்டை முன்னிட்டு ராகவா லாரன்ஸின் 25வது படம் குறித்த அறிவிப்பு வெளியாகி உள்ளது. இதனை படக்குழு போஸ்டர் வெளியிட்டு தெரிவித்துள்ளது. வெங்கட் மோகன் இயக்கும் இப்படத்திற்கு 'ஹண்டர்' என பெயரிடப்பட்டுள்ளது. இதற்கு முன் விஷால் நடிப்பில் வெளிவந்த அயோக்யா படத்தை இவர் இயக்கியுள்ளார். இயக்குனர் ஏ.ஆர் முருகதாஸ் உடன் உதவி இயக்குனராகவும் பணியாற்றியுள்ளார். சத்யஜோதி பிலிம்ஸ் நிறுவனம் இப்படத்தை தயாரிக்கிறது.
தேவி ஸ்ரீ பிரசாத் இசையமைக்கவுள்ளார். ஓம் பிரகாஷ் ஒளிப்பதிவு செய்கிறார். இந்த படம் 2025 ம் ஆண்டு கோடை விடுமுறைக்கு வெளியாகவுள்ளதாக தெரிவிக்கப்பட்டுள்ளது.
லோகேஷ் கனகராஜ் தயாரிப்பில் 'பென்ஸ்' படத்தில் ராகவா லாரன்ஸ் நடிப்பதாக இன்று காலை அறிவிக்கப்பட்ட நிலையில் தற்போது மற்றொரு புதிய படமான 'ஹண்டர்' குறித்த அறிவிப்பும் வெளியாகியுள்ளது.
ஒரே நாளில் ராகவா லாரன்ஸ் நடிக்கும் இரண்டு படங்களின் அறிவிப்பு வெளியாகியிருப்பது அவரது ரசிகர்களை உற்சாகத்தில் ஆழ்த்தியுள்ளது.