'புஷ்பா' படத்தின் இரண்டாம் பாகத்தில் விஜய் சேதுபதி நடிக்கிறார்..?
|புஷ்பா 2 படத்தில் நடிகர் விஜய் சேதுபதி நடிக்க உள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது.
அல்லு அர்ஜுன் நடிப்பில் கடந்த ஆண்டு வெளியாகி மிகப்பெரிய வெற்றியைப் பெற்ற திரைப்படம் 'புஷ்பா'. செம்மரக்கட்டை கடத்தலை மையமாக கொண்டு எடுக்கப்பட்ட இந்த படம் அனைத்து இந்திய மொழிகளிலும் வெளியாகி ரூ.350 கோடி வரை வசூலை ஈட்டியது. இப்படத்தின் இரண்டாம் பாகமான 'புஷ்பா-தி ரூல்' படத்தின் படப்பிடிப்பு ஆகஸ்ட் மாதம் தொடங்க உள்ளது.
இந்த நிலையில் புஷ்பா படத்தின் தயாரிப்பாளர்கள் நடிகர் விஜய் சேதுபதியை இந்த படத்தில் முக்கியமான கதாபாத்திரத்தில் நடிப்பதற்காக அணுகியதாக தகவல் வெளியாகி உள்ளது. முதலில் வன அதிகாரி வேடத்தில் நடிக்க விஜய் சேதுபதி ஒப்பந்தம் செய்யப்பட்டார். ஆனால் அவருடைய படப்பிடிப்பு தேதிகளில் ஏற்பட்ட சிக்கலால் படத்திலிருந்து விலகினார்.
இருந்தாலும் தயாரிப்பாளர்கள் தற்போது 'புஷ்பா: தி ரூல்' படத்தில் விஜய் சேதுபதியை நடிக்க வைப்பதற்கு திட்டமிட்டுள்ளதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அதிகாரப்பூர்வ அறிவிப்பு இன்னும் வெளியாகவில்லை. 'புஷ்பா: தி ரூல்' படத்திற்கான எதிர்பார்ப்பு இரட்டிப்பாக உள்ளது.
இந்த படத்திலும் ராஷ்மிகா மந்தனா, பகத் பாசில் உள்ளிட்டோர் நடிக்கின்றனர். முதல் பாகத்தைப் போலவே, இரண்டாம் பாகமும் பான்-இந்தியா வெளியீடாக இருக்கும்.