ராம் பொத்தினேனியின் 'டபுள் ஐஸ்மார்ட்' படத்திற்கு 'ஏ' சான்றிதழ்
|ராம் பொத்தினேனியின் 'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது.
சென்னை,
தெலுங்கில் பிரபல நடிகராக வலம் வருபவர் ராம் பொத்தினேனி. தெலுங்கு சினிமாவில் பிசியான நடிகராக வலம் வரும் இவர் சமீபத்தில் வாரியர், ஸ்கந்தா போன்ற படங்களில் நடித்திருந்தார். அதைத் தொடர்ந்து டபுள் இஸ்மார்ட் எனும் படத்தில் நடிக்கிறார். இந்த படமானது 2019ல் வெளியான 'இஸ்மார்ட் சங்கர்' எனும் படத்தின் இரண்டாம் பாகமாக உருவாகிறது.
இந்த படத்தை விஜய் தேவரகொண்டாவின் லைகர் படத்தின் இயக்குனர் பூரி ஜெகன்நாத் இயக்குகிறார். இந்த படத்தில் சஞ்சய் தத் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். இந்த படத்தை பூரி ஜெகன்நாத் தயாரிக்க மணி ஷர்மா படத்திற்கு இசையமைக்கிறார். இதில், காவியா தாபர் கதாநாயகியாக அறிமுகமாகிறார்.
பிரம்மாண்ட பட்ஜெட்டில் தயாராகி வரும் இந்த படம் கடந்த மார்ச் 8-ம் தேதியே தமிழ், தெலுங்கு, மலையாளம், இந்தி, கன்னடம் உள்ளிட்ட மொழிகளில் வெளியாக இருப்பதாக படக்குழுவினர் சார்பில் ஏற்கனவே அறிவிக்கப்பட்டிருந்தது. ஆனால் ஒரு சில காரணங்களால் இந்த படத்தில் ரிலீஸ் ஒத்திவைக்கப்பட்டு தற்போது இப்படம் ஆனது ஆகஸ்ட் 15-ல் வெளியாக இருக்கிறது.
படத்தின் டிரெய்லர் அண்மையில் வெளியாகி மக்களிடையே நல்ல வரவேற்பை பெற்றது. படத்தில் ரவுடியாக நடித்துள்ளார் ராம் பொதினேனி. சஞ்சய் தத் மூளையை எடுத்து ராம் பொதினேனி மூளையையும் இடம் மாற்றுகின்றனர். இதற்கடுத்து என்ன ஆனது என்பதே படத்தின் கதை.
'டபுள் ஐஸ்மார்ட்' திரைப்படத்திற்கு தணிக்கை குழு 'ஏ' சான்றிதழ் அளித்துள்ளது. திரைப்படம் ஒரு அதிரடி ஆக்சனாக ரசிகர்களுக்கு விருந்து படைக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.