ரீ-ரிலீஸ் செய்யப்பட்ட 'புதுப்பேட்டை'... திரையை தெறிக்கவிட்ட ரசிகர்கள்...!
|தனுஷின் புதுப்பேட்டை திரைப்படம் மீண்டும் வெளியாகி உள்ளது.
சென்னை,
சமீபகாலமாக, வெளியானபோது ரசிகர்கள் கொண்டாட தவறிய சில திரைப்படங்கள் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டு வருகின்றன. அவ்வாறு ரீ-ரிலீஸ் செய்யப்படும் படங்களை ரசிகர்கள் தற்போது திரையரங்குகளுக்கு சென்று கொண்டாடி வருகின்றனர்.
அந்தவகையில், தனுஷ் நடிப்பில் கடந்த 2006ம் ஆண்டு வெளியான புதுப்பேட்டை திரைப்படம் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டுள்ளது. செல்வராகவன் இயக்கிய இந்த படம் வெளியானபோது கலவையான விமர்சனங்களையே பெற்றது. ஆனால் சமீபத்தில் இந்த படத்தின் காட்சிகள் சமூக வலைதளங்களில் வைரலானது. இந்த திரைப்படத்தை வெளியானபோது கொண்டாட தவறிவிட்டோமே என்று ரசிகர்கள் பலர் கருத்து தெரிவித்து வந்தனர்.
இந்நிலையில் சென்னை வட பழனியில் உள்ள பிரபல திரையரங்கில் இப்படம் நேற்று மாலை ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது. இதனால் உற்சாகமடைந்த ரசிகர்கள் திரையரங்கிற்கு சென்று படத்தை பார்த்து பாராட்டி வருகின்றனர். சமீபத்தில் தனுஷின் 'வடசென்னை' படம் இதே திரையரங்கில் ரீ-ரிலீஸ் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.