10 மொழிகளில் தயாராகும் 'புராஜக்ட் கே'
|பிரபாஸ் நடிப்பில், 10 மொழிகளில் தயாராகும் ‘புராஜக்ட் கே’ என்ற படம் ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கு சினிமாவின் முன்னணி நடிகராக இருந்த பிரபாஸ், 'பாகுபலி' படத்தில் நடித்ததன் மூலம் பான்-இந்தியா நடிகராக மாறினார். 'பாகுபலி'யை தொடர்ந்து அவர் நடிப்பில் வெளியான 'சாஹோ', 'ராதே ஷ்யாம்' ஆகிய படங்களும் பான்-இந்தியா படங்களாகவே வெளியிடப்பட்டன.
தொடர்ந்து அவர் நடிப்பில் உருவாகி வரும் 'ஆதிபுருஷ்', 'சலார்', 'புராஜக்ட் கே' ஆகிய படங்களும் கூட, பான் - இந்தியா படங்களாகவே உருவாகி வருகின்றன. இதில் 'புராஜக்ட் கே' என்ற படம் ரூ.500 கோடியில் தயாரிக்கப்பட்டு வருகிறது.
தெலுங்கின் மற்றொரு முன்னணி நடிகரான நானியை வைத்து 'எவடே சுப்பிரமணியம்' என்ற படத்தை இயக்கியதன் மூலம், இயக்குனராக அறிமுகமானவர், நாக் அஸ்வின். தொடர்ந்து இவர் இயக்கத்தில் சாவித்திரியின் வாழ்க்கை வரலாற்று படமான 'மகாநடி' திரைப்படம் வெளியானது,
முதல் இரண்டு படங்களும் வெற்றிப்படமாக அமைந்ததால், பிரபாஸை இயக்கும் வாய்ப்பு கிடைத்தது. இந்தப் படத்தை அஸ்வினி தத் தயாரிக்கிறார். சயின்ஸ் பிக்ஷன் திரைப்படமாக உருவாகி வரும் இந்தப் படம் கடந்த ஆண்டு ஜூலை மாதம் தொடங்கியது. தொடர்ந்து சீரான இடைவெளியில் இதன் படப்பிடிப்பு நடைபெற்று வருவதால், அடுத்த ஆண்டு இறுதியில் இதன் படப்பிடிப்பு முழுமையாக முடியும் என்றும், அதைத் தொடர்ந்து தொழில்நுட்ப பணிகள் நடைபெற்று 2024-ம் ஆண்டு அக்டோபரில் படம் வெளியாகும் என்றும் படக்குழு தெரிவித்துள்ளது.
இந்தப் படத்தில் பிரபாஸ் கதாநாயகனாகவும், தீபிகா படுகோன் கதாநாயகியாகவும் நடிக்கிறார்கள். இவர்களுடன் முக்கிய கதாபாத்திரத்தில் அமிதாப் பச்சன், திஷா பதானி ஆகியோரும் நடிக்கின்றனர். பான்-இந்தியா படமாக உருவாகும் இந்தத் திரைப்படம், 10 மொழிகளில் வெளியாக இருப்பதாகவும் படக்குழுவினர் கூறியிருக்கிறார்கள்.