அமீர் குறித்த பேச்சுக்கு வருத்தம் தெரிவித்தார் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா..!
|இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் சமூக வலைதளங்களில் பேசுபொருளாகியது.
சென்னை,
'பருத்தி வீரன்' படத்தின்போது நடந்த பல்வேறு பிரச்சினைகள் தொடர்பாக இயக்குனர் அமீர் மற்றும் தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா இடையேயான கருத்து பரிமாற்றம் கடந்த சில நாட்களாக சமூக வலைதளங்களில் பேசுபொருளாகி இருக்கிறது. இந்த விவகாரம் தொடர்பாக தயாரிப்பாளர் ஞானவேல் ராஜாவுக்கு ஆதரவாக திரைத்துறையை சேர்ந்த சிலரும், இயக்குனர் அமீருக்கு ஆதரவாக சிலரும் தங்களின் கருத்துகளை சமூக வலைதளங்களில் பதிவிட்டு வருகின்றனர்.
இந்த நிலையில், இயக்குனர் அமீர் குறித்த பேச்சுக்கு தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வருத்தம் தெரிவித்து அறிக்கை வெளியிட்டுள்ளார்.
தயாரிப்பாளர் ஞானவேல் ராஜா வெளியிட்டுள்ள அறிக்கையில்,,
'பருத்தி வீரன்' பிரச்சினை கடந்த 17 ஆண்டுகளாக நடந்து கொண்டிருக்கிறது. நான் இது நாள் வரை அதை பற்றி பேசியது இல்லை. என்றைக்குமே 'அமீர் அண்ணா' என்றுதான் நான் அவரை குறிப்பிடுவேன். ஆரம்பத்திலிருந்தே அவர் குடும்பத்தாருடன் நெருங்கிப்பழகியவன்.
அவரது சமீபத்திய பேட்டிகளில் என் மீது அவர் சுமத்திய பொய்யான குற்றச்சாட்டுகள் என்னை மிகவும் காயப்படுத்தின. அதற்கு பதில் அளிக்கும்போது நான் பயன்படுத்திய சில வார்த்தைகள் அவர் மனதை புண்படுத்தி இருந்தால் அதற்கு நான் மனப்பூர்வமாக வருத்தம் தெரிவித்துக் கொள்கிறேன். என்னை வாழவைக்கும் சினிமா துறையையும் அதில் பணிபுரியும் அனைவரையும் மிகவும் மதிப்பவன் நான்" என்று அந்த அறிக்கையில் ஞானவேல் ராஜா தெரிவித்துள்ளார்.