மாஸ்கோவில் 'கோட்' : படப்பிடிப்பு வீடியோவை வெளியிட்ட தயாரிப்பாளர்
|மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி 'கோட்' படப்பிடிப்பு வீடியோவை ஒட்டுமொத்த கோர்வையாக வெளியிட்டுள்ளார்.
சென்னை,
நடிகர் விஜய், வெங்கட் பிரபு இயக்கும் 'தி கிரேட்டஸ்ட் ஆப் ஆல் டைம்' (கோட்) படத்தில் நடித்து வருகிறார். இந்தப் படத்தில் பிரசாந்த், மோகன், பிரபுதேவா, ஜெயராம், கணேஷ், யோகிபாபு, அஜ்மல் அமீர், சினேகா, லைலா, மீனாட்சி சவுத்ரி ஆகியோர் நடிக்கின்றனர். யுவன் சங்கர் ராஜா இசை அமைக்கும் இந்தப்படத்தில் விஜய் இரண்டு வேடங்களில் நடிக்கிறார்.சமீபத்தில் இதன் புதிய போஸ்டர் வெளியாகியது. அதில் விநாயகர் சதுர்த்தியை முன்னிட்டு செப்டம்பர் 5-ம் தேதி இந்தப் படம் திரையரங்குகளில் வெளியாகுமென படக்குழு அறிவித்துள்ளது.
மாஸ்கோ படப்பிடிப்பில் நடக்கும் லொகேஷன் வீடியோ மற்றும் விஜய் ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோ ஆகியவற்றை படத்தின் கிரியேட்டிவ் தயாரிப்பாளர் அர்ச்சனா கல்பாத்தி தன்னுடைய இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டிருந்தார். ஸ்கேட்டிங் பயிற்சி செய்யும் வீடியோவில் விஜய் குழந்தையாக மாறியிருந்ததை பார்க்க முடிந்தது. இந்நிலையில் தற்போது மாஸ்கோவில் கோட் என்று அர்ச்சனா கல்பாத்தி சூட்டிங் வீடியோவை ஒட்டுமொத்த கோர்வையாக வெளியிட்டுள்ளார்.
இந்த வீடியோவில் விஜய் மட்டுமில்லாமல் படக்குழுவினர் அனைவரும் உள்ளனர். மேலும் அர்ச்சனா கல்பாத்தி, ஐஸ்வர்யா கல்பாத்தி ஆகியோரும் உள்ளனர். மாஸ்கோவின் கொண்டாட்ட தருணங்கள், விஜய்யின் ஸ்கேட்டிங் பயிற்சி வீடியோ, படக்குழுவினரின் செயல்பாடுகள், மாஸ்கோ வீதிகள், சிறப்பான சுற்றுலாத்தளங்கள், உணவுகள் உள்ளிட்ட அனைத்தையும் இந்த வீடியோவில் அர்ச்சனா கல்பாத்தி இணைத்துள்ளார். தொடர்ந்து படம் குறித்தும் படத்தின் படப்பிடிப்பு குறித்தும் அவர் அப்டேட் தெரிவித்துவரும் சூழலில் இந்த வீடியோவும் ரசிகர்களை கவரும்வகையில் அமைந்துள்ளது.