டோனி விருது வென்ற ஏஞ்சலினா ஜோலி - பிரியங்கா சோப்ரா வாழ்த்து
|சிறந்த இசையமைப்பிற்கான டோனி விருது பெற்ற ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது மகள் விவியெனுக்கு பிரியங்கா சோப்ரா வாழ்த்து தெரிவித்துள்ளார்.
மும்பை,
நடிகை பிரியங்கா சோப்ரா தனது ஹாலிவுட் ரோல் மாடலான ஏஞ்சலினா ஜோலியை அவரது சாதனைகளுக்காக பாராட்டியுள்ளார். ஆஸ்கார் விருது பெற்ற நடிகையான ஜோலி, சமீபத்தில் 'தி அவுட்சைடர்ஸ்' என்ற இசைத் திரைப்படத்தைத் தயாரித்ததற்காக அவருக்கு முதல் முறையாக டோனி விருது வழங்கப்பட்டு இருக்கிறது.
இந்நிலையில், ஏஞ்சலினா ஜோலி மற்றும் அவரது மகள் விவியென் ஆகியோரின் புகைப்படங்களை சமூக ஊடகங்களில் பகிர்ந்துள்ளார் பிரியங்கா சோப்ரா. அதனுடன், தனது முதல் டோனி விருதை வென்ற ஏஞ்சலினா ஜோலிக்கு வாழ்த்து தெரிவித்து இதயபூர்வமான குறிப்பையும் பகிர்ந்துள்ளார்.
அதில் 'வாழ்க்கையில் எல்லாவற்றிற்கும் தகுதியான இந்த தேவதைக்கு என்னுடைய மிகப்பெரிய வாழ்த்துகள். தி அவுட்சைடர்சிற்காக சிறந்த இசையமைப்பிற்கான டோனி விருதை வென்றதற்கு வாழ்த்துகள். மேலும், பல விருதுகள் மற்றும் 12 பரிந்துரைகளுக்காகவும் வாழ்த்துகள். நீங்கள் ஒரு சக்தி. தினமும் நீங்கள் என்னை ஈர்க்கிரீர்கள். இவ்வாறு தெரிவித்துள்ளார். மேலும், ஜோலியின் மகள் விவியெனையும் வாழ்த்தினார்.