'ஆடு ஜீவிதம்' திரைப்படத்தின் இரண்டாவது நாள் வசூல்
|'ஆடு ஜீவிதம்' திரைப்படம் முதல் நாளில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்தது.
திருவனந்தபுரம்,
மலையாள எழுத்தாளர் பென்யமின் எழுதிய புகழ்பெற்ற நாவலை அடிப்படையாகக் கொண்டு உருவாகியுள்ள திரைப்படம் 'ஆடு ஜீவிதம்'. இயக்குனர் பிளஸ்சி இயக்கியுள்ள இந்த படத்தில் பிருத்விராஜ் கதாநாயகனாக நடித்துள்ளார். அமலாபால் நாயகியாக நடித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். இந்த திரைப்படம் மலையாளம், தமிழ், தெலுங்கு, கன்னடம், இந்தி உள்ளிட்ட மொழிகளில் கடந்த 28-ம் தேதி வெளியானது.
'ஆடு ஜீவிதம்' திரைப்படம் முதல் நாளில் இந்திய பாக்ஸ் ஆபீசில் ரூ.7.60 கோடிக்கும் மேலாக வசூல் செய்து, மிகப்பெரிய தொடக்கத்தை பெற்ற மலையாளப் படத்தில் ஒன்றாக அமைந்துள்ளது. 'ஆடு ஜீவிதம்' படத்தின் மலையாளப் பதிப்பு ரூ.6.50 கோடிக்கு மேலாகவும், தமிழ், கன்னடம், தெலுங்கு, இந்தி மொழி பதிப்பு ரூ.1 கோடிக்கு மேலாகவும் வசூல் செய்தது.
இந்நிலையில், 'ஆடு ஜீவிதம்' திரைப்படம் இரண்டாவது நாளில் ரூ. 6.50 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது. இதன் மூலம் இத்திரைப்படம் இரண்டு நாளில் ரூ. 14.10 கோடிக்கு மேல் வசூல் செய்துள்ளது.
சமீபத்தில் வெளியான 'மஞ்சுமெல் பாய்ஸ்' திரைப்படம், உலகளவில் ரூ.212 கோடிக்கும் மேல் வசூல் செய்த மலையாளப் படமாக உள்ளது குறிப்பிடத்தக்கது.