< Back
சினிமா செய்திகள்
நான் கொடுத்த செக்கை வீசினார் பிரகாஷ் ராஜ் - நடிகர் பிருத்விராஜ்
சினிமா செய்திகள்

நான் கொடுத்த செக்கை வீசினார் பிரகாஷ் ராஜ் - நடிகர் பிருத்விராஜ்

தினத்தந்தி
|
25 March 2024 4:25 PM IST

தான் தயாரித்த முதல் படத்திற்காக வழங்கிய செக்கை நடிகர் பிரகாஷ் ராஜ் தூக்கி வீசியதாக நடிகர் பிருத்விராஜ் தெரிவித்துள்ளார்.

சென்னை,

நடிகர் பிருத்விராஜ் தமிழில் கனா கண்டேன், பாரிஜாதம், மொழி, சத்தம் போடாதே, கண்ணாமூச்சி ஏனடா, வெள்ளித்திரை உள்ளிட்ட படங்களில் நடித்துள்ளார். மேலும், பிருத்விராஜ் மலையாளத்தில் முன்னணி கதாநாயகனாக இருக்கிறார். இவர் தற்போது 'ஆடுஜீவிதம்' என்ற மலையாள படத்தில் நடித்துள்ளார்.இந்த படத்தை தேசிய விருது பெற்ற இயக்குநர் பிளெஸ்சி இயக்கி உள்ளார். நாயகியாக அமலாபால் நடித்துள்ளார். இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார் . இந்த படத்தின் படப்பிடிப்பு ஐந்து வருடங்களுக்கு முன்பே தொடங்கி பல்வேறு காரணங்களால் தடைபட்டு சமீபத்தில் முழு படப்பிடிப்பும் முடிவடைந்துள்ளது.

வெளிநாட்டிற்கு வேலைக்குச் சென்று பாலைவனத்தில் ஆடு மேய்ப்பவராகச் சிக்கித் தவிப்பவர்களின் வலியைச் சொல்லும் இத்திரைப்படம், மலையாள எழுத்தாளர் பென்யாமின் எழுதிய 'ஆடுஜீவிதம்' எனும் நாவலைத் தழுவி எடுக்கப்பட்டிருக்கிறது. மலையாளம், தமிழ், தெலுங்கு, இந்தி உள்ளிட்ட பல மொழிகளில் இத்திரைப்படம் வரும் 28-ம் தேதி திரையரங்குகளில் வெளியாக இருக்கிறது. இதையொட்டி நடிகர் பிருத்விராஜ், பல நேர்காணல்களில் இத்திரைப்படம் குறித்துப் பேசிவருகிறார்.

இந்நிலையில் தனியார் ஊடகத்துக்கு அளித்த பேட்டியில் நடிகர் பிரித்விராஜ் தெரிவித்திருப்பதாவது:

" கடந்த 2008-ம் ஆண்டு இந்தப் படத்திற்கான பேச்சுவார்த்தைப் பணிகள் தொடங்கி 2018-ம் ஆண்டு முதற்கட்ட படப்பிடிப்பு தொடங்கியது. இந்த அறிவிப்பு வெளியாகி இன்றைய நாள்வரை மொத்தம் 16 ஆண்டுகளை இந்தப் படத்திற்காக தங்களை அர்பணித்திருக்கிறார்கள் படக்குழுவினர். 2008-ல் இந்தப் படத்தை இயக்குநர் பிளெஸ்சி எடுக்க நினைத்தபோதே அவரிடம் நிறைய திட்டங்கள் இருந்தன.

வெளிநாட்டில் நிஜ பாலைவனத்தில் இந்தப் படத்தை எடுக்க வேண்டும் என்று அவர் நினைத்தார். இத்தனை ஆண்டுகால தாமதம் என்பது ஒரு வகையில் நல்லது என்றுதான் நான் சொல்வேன். 2008-ல் எனக்கு திருமணம் ஆகவில்லை, நான் தயாரிப்பாளர் இல்லை. ஆனால் 2018-ல் இந்தப் படம் தொடங்கியபோது சினிமாவில் எனக்கு ஒரு பார்வையும் அனுபவமும் ஏற்பட்டிருந்தது. இந்தப் படத்தின் முதல் நாள் ஷூட்டிங்கில் இருந்து கடைசி நாள் படப்பிடிப்பு வரை நான் வேறு ஒரு மனிதாக மாறி இருக்கிறேன்" என்று அவர் கூறியுள்ளார்.

மேலும் தமிழில் தான் நடித்த படங்களில் தான் திரும்பி பார்க்க விரும்பும் படமாக மொழி இருப்பதாக தெரிவித்த பிருத்விராஜ் , " மொழி படம் ஒரு மாடர்ன் கிளாசிக். ஒலியைக் கேட்க முடியாத ஒரு பெண், ஒலியை கொண்டாடும் ஒருவன். இவர்கள் இருவருக்கும் இடையில் நடக்கும் காதலை படமாக்கியிருப்பார் ராதா மோகன். இந்தப் படத்தில் நான் நடிக்க முக்கிய காரணம் பிரகாஷ் ராஜ் தான். இந்தப் படத்திற்கு பிறகு நாங்கள் இருவரும் கல்லூரி படிக்கும் நண்பர்கள் மாதிரி நெருக்கமாகி விட்டோம். மொழி படத்திற்கு பின் நாங்கள் இருவரும் சேர்ந்து நிறையப் படங்களில் நடித்திருக்கிறோம். நான் தயாரித்த '9' படத்தில் அவர் நடித்தார். அதற்காக அவருக்கு செக் கொடுத்தபோது "என்ன தைரியம் இருந்தா என்கிட்ட செக் கொடுப்ப?" என்று சொல்லி அதைத் தூக்கி எறிந்தார். என்னை எப்போதுமே வேறு ஒருவனாக அவர் பார்க்கவே மாட்டார் " என்று பிருத்விராஜ் கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்