பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தின் பெயர் அறிவிப்பு
|பிரபு சாலமன் இயக்கும் புதிய படத்தின் பெயர் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது.
சென்னை,
இயக்குனர் பிரபு சாலமன், கடந்த 1999 ம் ஆண்டு கண்ணோடு காண்பதெல்லாம் என்ற படத்தின் மூலம் இயக்குனராக அறிமுகமானவர். அதன் பின்னர் இவர் இயக்கிய 'மைனா' திரைப்படம் ரசிகர்கள் மத்தியில் மிகப்பெரிய வரவேற்பை பெற்று மாபெரும் வெற்றி படமாக அமைந்தது. அதன் பிறகு கும்கி, கயல், செம்பி போன்ற வித்தியாசமான கதையம்சம் கொண்ட படங்களை இயக்கி வெற்றி கண்டார். அமலா பால் , கயல் ஆனந்தி , கீர்த்தி சுரேஷ் என பல்வேறு பிரபல நடிகைகளை தமிழ் சினிமாவுக்கு அறிமுகப்படுத்தியவர் இயக்குநர் பிரபு சாலமன்.
இந்த நிலையில், பிரபு சாலமான் இயக்கும் புதிய படத்தின் டைட்டில் மற்றும் பர்ஸ்ட் லுக் போஸ்டர் தற்போது வெளியாகியுள்ளது. படத்திற்கு 'மம்போ' எனப் பெயரிடப்பட்டுள்ளனர். இது, சிறுவனுக்கும் சிங்கத்திற்கும் இடையேயான உறவைப் பேசும் படமாக இருக்கும் எனத் தெரிகிறது.
மேலும் இந்த படத்தில் இருக்கும் தனித்துவமான விஷயம் என்னவென்றால், ஆசியாவிலேயே முதன்முறையாக எந்தவித கிராபிக்ஸும் இல்லாமல் ஒரிஜினல் சிங்கத்தை நடிக்க வைக்கிறார் பிரபு சாலமன். இந்த படத்தை ரோஜா காம்பைன்ஸ் நிறுவனம் தயாரிக்க இருப்பதாகவும் டி இமான் இசையமைக்கப் போவதாகவும் அறிவிக்கப்பட்டுள்ளது. இப்படத்தில் வனிதா விஜயகுமாரின் மகன் விஜய் ஸ்ரீ ஹரி நடிகராக அறிமுகமாகவுள்ளார். பிரபு சாலமனின் மகள் ஹேசல் ஷைனி இப்படத்தில் நாயகியாக அறிமுகமாக இருக்கிறார்.இப்படத்தில் யோகி பாபு முக்கிய கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார்.
கும்கி படத்தில் யானையை வைத்து படத்தை உருவாக்கியவர் இம்முறை சிங்கத்தை கையாளப்போவது ரசிகர்களிடையே எதிர்பார்ப்பை ஏற்படுத்தியுள்ளது.