மீண்டும் புராண படத்தில் பிரபாஸ்?
|பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள படமும் புராண கதை என்று தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசுகின்றனர்
பிரபாஸ் நடித்து திரைக்கு வந்து ஓடிக்கொண்டு இருக்கும் 'ஆதிபுருஷ்' படத்தை ராமாயண கதையை மையமாக வைத்து எடுத்துள்ளனர். இதில் பிரபாஸ் ராமர் கதாபாத்திரத்தில் நடித்து இருக்கிறார். இந்த படம் சர்ச்சைகளை கிளப்பியது. ராமர் தோற்றத்தை மாற்றி இருப்பதாகவும் பிரச்சினைக்குரிய வசனங்கள் படத்தில் இருப்பதாகவும் எதிர்ப்பு தெரிவித்தனர். படத்துக்கு தடை விதிக்கும்படியும் வற்புறுத்தினர். கோர்ட்டிலும் வழக்கு தொடரப்பட்டு உள்ளது.
இந்த நிலையில் பிரபாஸ் அடுத்து நடிக்க உள்ள 'புராஜெக்ட் கே' படமும் புராண கதை என்று தெலுங்கு திரையுலகில் பரபரப்பாக பேசுகின்றனர். மகாவிஷ்ணுவின் கல்கி அவதாரத்தை மையமாக வைத்து இந்த படம் தயாராக இருப்பதாகவும் இதில் பிரபாஸ் விஷ்ணுவாக நடிக்கிறார் என்றும் கூறுகின்றனர். புராண கதையையும் நவீன தொழில் நுட்பத்தையும் கலந்து இந்த படத்தை டைரக்டர் நாக் அஸ்வின் எடுப்பதாக கூறப்படுகிறது.
இந்த படத்தில் கமல்ஹாசன் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கிறார். பிரபாசுக்கு விஷ்ணு கதாபாத்திரம் என்றால் கமல்ஹாசனுக்கு என்ன வேடம் என்ற எதிர்பார்ப்பு ஏற்பட்டு உள்ளது. அமிதாப்பச்சன், தீபிகா படுகோனே ஆகியோரும் நடிக்கிறார்கள்.