இணையத்தில் பரவும் ஆபாச வீடியோ... டீப்-பேக் தொழில்நுட்பத்தை விமர்சித்து நடிகை அபிராமி பதிவு
|இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் சமீபத்தில் வெளியாகின.
சென்னை,
தென்னிந்திய சினிமாவின் முன்னணி நடிகையான ராஷ்மிகா மந்தனாவின் டீப் பேக் வீடியோ கடந்த சில மாதங்களுக்கு முன் வெளியாகி பெரும் பரபரப்பை பரபரப்பை ஏற்படுத்தியது. இந்த வீடியோவை வெளியிட்ட நபரை டெல்லி போலீசார் சமீபத்தில் கைது செய்தனர். அவரை தொடர்ந்து இந்தி நடிகைகள் பிரியங்கா சோப்ரா, கத்ரீனா கைப், கஜோல் ஆகியோரின் டீப் பேக் வீடியோக்கள் வெளியாகின.
இந்த வரிசையில் டீப்-பேக் தொழில்நுட்பத்தின் மூலம் உருவாக்கப்பட்ட நடிகை அபிராமி வெங்கடாசலத்தின் ஆபாச வீடியோ இணையத்தில் தற்போது தீயாய் பரவி வருகிறது. இந்நிலையில் டீப்-பீக் தொழில்நுட்பத்தை விமர்சித்து நடிகை அபிராமி தனது இன்ஸ்டாகிராம் பக்கத்தில் பதிவிட்டு உள்ளார். அவர் அந்த பதிவில், 'நான் என்னுடைய வாழ்க்கையில் சந்தித்த மோசமான மனிதர்களுக்கு கூட இப்படி ஒரு விஷயம் நடக்கக்கூடாது.
சமீப காலமாக டீப் பேக் வீடியோ பிரபலமாகி வருவது ரொம்ப வருத்தத்தை ஏற்படுத்துகிறது. இதன்மூலம் யார் வேண்டுமானாலும் நம்மை மோசமாக காட்டலாம். இது ரொம்ப பயத்தை ஏற்படுத்தி இருக்கிறது. நான் சொல்ல விரும்புவது ஒன்றுதான். இதை உருவாக்கியவன் மிகப்பெரிய குற்றவாளி, அதை பகிர்ந்து இன்பம் அனுபவிப்பவன் அதைவிட பெரிய குற்றவாளி.
கவலை வேண்டாம் அவர்களுக்கு இந்த பிரபஞ்சம் கண்டிப்பாக தக்க பாடத்தை கொடுக்கும். நான் தைரியமான பெண். என்னுடைய வலிமையை யாராலும் தவிர்க்க முடியாது. தொழில்நுட்பத்தை கற்று கொள்வதை தவிர மற்ற எல்லாவிதமான கீழ் தரமான வேலைகளும் இங்கு நடக்கிறது. பெண்களின் டீப்-பேக் வீடியோவை பார்ப்பதில் என்ன சந்தோஷம் கிடைக்கிறது என்று தெரியவில்லை? நான் எதுவும் சொல்ல விரும்பவில்லை.
ஆனால், இதுபோல் மற்ற பெண்கள் பாதிக்கப்பட்டு விடக்கூடாது என்பதற்காகவே தற்போது நான் பேசுகிறேன். இந்த விவகாரம் தொடர்பாக நான் போலீசிலும் புகார் அளிக்க முடிவெடுத்து இருக்கிறேன்' என்று பதிவிட்டு உள்ளார். பரத நாட்டிய கலைஞரான அபிராமி வெங்கடாசலம் நோட்டா, நேர்கொண்ட பார்வை, துருவநட்சத்திரம் போன்ற படங்களில் நடித்து உள்ளார். மேலும் பிக்பாஸ் சீசன் 3 நிகழ்ச்சியில் பங்கேற்று உள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.