< Back
சினிமா செய்திகள்
யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு
சினிமா செய்திகள்

"யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது" பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் மறைவு -வாழ்க்கை வரலாறு

தினத்தந்தி
|
4 Feb 2023 3:15 PM IST

இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடியுள்ளார் வாணிஜெயராம்.

சென்னை

தமிழ் சினிமாவில் பிரபல பின்னணி பாடகி வாணி ஜெயராம் (வயது 78). இவர் கடந்த 1974-ம் ஆண்டு வெளியான தீர்க்க சுமங்கலி என்ற படத்தின் மூலம் திரையுலகிற்கு பாடகியாக அறிமுகமானார். பின்னர், தமிழ், தெலுங்கு, கன்னடம் உட்பட மொழிகளில் ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி ரசிகர்களின் மனதில் நீங்கா இடம் பிடித்துள்ளார்.

சமீபத்தில் இவருக்கு பத்ம பூஷண் விருது வழங்கப்பட்டது. இந்த நிலையில் சென்னையில் உள்ள தனது வீட்டில் பாடகி வாணி ஜெயராம் தவறி விழுந்து உயிரிழந்தாக கூறப்படுகின்றது. 78 வயதான வாணி ஜெயராம் மறைவுக்கு தலைவர்கள், திரையுலகினர், ரசிகர்கள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர்.

வாணி ஜெயராம் வாழ்க்கை வரலாறு:-

1971-ம் வருடப் புத்தாண்டில் வெளிவந்த 'குட்டி' (GUDDI) என்ற இந்திப் படத்தில், வசந்த் தேசாயின் இசையில் 'போலே ரே பப்பி ஹரா' என்ற 'பாடலைப் பாடி திரையுலகில் பின்னணிப் பாடகியாக அறிமுகமானார் வாணி ஜெயராம்.

இவரது முதல் பாடலே அமோக வரவேற்பை பெற்றதை தொடர்ந்து, இசையமைப்பாளர்களால் தேடப்படும், முன்னணி பாடகியாக உருவெடுத்தார். ஹிந்தியை தொடர்ந்து, தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம், துளு, குஜராத்தி, ஓடியா, பெங்காலி என 19க்கும் மேற்பட்ட மொழி பாடல்களை பாடி பிரபலமானார்.

1974 ஆம் ஆண்டு தமிழில் "தீர்க்கசுமங்கலி" படத்தில் "மல்லிகை என் மன்னன் மயங்கும்" என்ற,முத்தான பாடலாக அமைந்தது.

தீர்க்கசுமங்கலி படத்திற்கு முன்பே, இவர், "வீட்டுக்குவந்த மருமகள்", "சொல்லத்தான் நினைக்கிறேன்" முதலான படங்களில் பாடியிருந்தாலும், தீர்க்கசுமங்கலி படமே முதலில் வந்ததால், அதில் இடம்பெற்ற இவர் பாடிய பாடலே, முதல்பாடலானது.

மாடர்ன், கர்நாடக இசை, கஜல், பாப்நாட்டுப்புறஇசை, உள்ளிட்ட பலவிதமான இசைப்பாடல்களையும் நன்றாகப் பாடக்கூடியவர் பாடகி வாணிஜெயராம்.

இந்தியாவின் முதல் 3டி படமான "மைடியர் குட்டிச்சாத்தான்" படத்தில், இவர் பாடிய "செல்லக்குழந்தைகளே!" பாடலில், இசையிலும்சரி, குரலிலும் சரி, குழந்தைகளின் குதூகலஉணர்வு வழிந்தோடுவதை உணரமுடியும். பழைய "பாலைவனச்சோலை" படத்தில் இவர் பாடிய "மேகமே! மேகமே!" பாடல், இன்றளவும் கேட்பவர்கள் மனதை, நெகிழவைக்கக் கூடியது.

'புனித அந்தோனியார்' படத்தில் 'மண்ணுலகில் இன்று தேவன் இறங்கி வருகிறார்', பி. சுசீலாவுடன் இணைந்து 'பாத பூஜை' படத்தில் 'கண்ணாடி அம்மா உன் இதயம்', 'அந்தமான் காதலி'யில் 'நினைவாலே சிலை செய்து', 'சினிமாப் பைத்தியம்' படத்தில் 'என் உள்ளம் அழகான வெள்ளித்திரை', 'தங்கப்பதக்க'த்தில் 'தத்திச் செல்லும் முத்துக் கண்ணன் சிரிப்பு, 'பாலாபிஷேக'த்தில் 'ஆலமரத்துக் கிளி' எனக் கேட்டதுமே இதயத்துள் ஈரம் படச் செய்யும் குரலினிமையுடன் அவர் பாடிய பாடல்களின் பட்டியல் மிகப் பெரிது.

'ரோசாப்பூ ரவிக்கைக்காரி' படத்தில் 'என்னுள்ளே ஏதோ', 'அழகே உன்னை ஆராதிக்கிறேன்' படத்தில் இடம்பெற்ற 'நானே நானா', 'சிறை' படத்தில் 'நான் பாடிக்கொண்டே இருப்பேன்' , 'சம்சாரம் அது மின்சாரம்' படத்தின் 'கட்டிக் கரும்பே கண்ணா', 'மயங்குகிறாள் ஒரு மாது' படத்தில் 'ஒருபுறம் வேடன். மறுபுறம் நாகம்', 'காலங்களில் அவள் வசந்தம்' படத்தில் 'மணமகளே உன் மணவறைக் கோலம்' ஆகிய பாடல்களை எடுத்துக்காட்டலாம்.

யாரது சொல்லாமல் நெஞ்சள்ளிப் போவது", "என் கல்யாண வைபோகம் உன்னோடுதான்", "கேள்வியின் நாயகனே", என்று வாணி ஜெயராம் அவர்களின் குரல் இனிமைக்கு, சாட்சிகளாக எத்தனையோ பாடல்களை உதாரணமாகக் கூறலாம்.

கலைவாணி என்ற இயற்பெயர் கொண்ட வாணி ஜெயராம் தமிழ் நாடு வேலூரில் 1945 ஆம் ஆண்டு நவம்பர் 30 ஆம் தேதி பிறந்தவர்.

வாணிஜெயராம் ராணிமேரி கல்லூரியில் பட்டப்படிப்பு முடித்த கையோடு, பாரத ஸ்டேட்வங்கியில் அதிகாரியாக பணியாற்றினார். அவருடைய இசைத்திறமையை அறிந்த கணவர் ஜெயராம்தான், இவரை, முழுநேர பாடகியாக்க முயற்சிமேற்கொண்டார்.

இந்தியாவிலுள்ள பலமொழிகளிலும் சேர்த்து, 10 ஆயிரத்திற்கும் க்கும் மேற்பட்ட பாடல்களைப்பாடியுள்ளார் வாணிஜெயராம்.

அபூர்வராகங்கள், சங்கராபரணம் (தெலுங்கு), சுவாதிகிரணம்(தெலுங்கு) முதலான படங்களில் பாடிய சிறந்த பாடல்களுக்காக, மூன்றுதேசிய விருதுகளைப் பெற்றுள்ளார் வாணிஜெயராம். சமீபத்தில் 2023 ஆம் ஆண்டுக்கான 'பத்ம பூஷன்' விருது விருது அறிவிக்கப்பட்டுள்ளது.

தேசிய விருதுகள்:

1975 – தேசிய விருது – சில பாடல்கள் –அபூர்வ ராகங்கள்

1980 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – சங்கராபரணம்

1991 – சிறந்த பின்னணி பாடகிக்கான தேசிய விருது – "அனத்திநீயர ஹர" சுவாதி கிரணம்


மேலும் செய்திகள்