பொன்னியின் செல்வன் பூங்குழலியின் 'அலைகடல்' பாடல் - படக்குழு வெளியிடு
|‘அலைகடல்’ முழுநீள பாடல் காட்சி ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.
சென்னை,
மணிரத்தினம் இயக்கிய பொன்னியின் செல்வன் படம் கடந்த செப்டம்பர் 30-ந் தேதி தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் ஆகிய 5 மொழிகளில் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் பெரிய வரவேற்பை பெற்றது. ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தன.
கல்கி எழுதிய நாவலை அடிப்படையாகக் கொண்டு, மணிரத்னம் இந்த படத்தை 2 பாகங்களாக உருவாக்கியுள்ளார். முதல் பாகம் வசூலில் பல்வேறு சாதனைகளை நிகழ்த்தியுள்ள நிலையில், அடுத்த பாகம் 2023 ஏப்ரல் மாதம் ரிலீசாகும் என தகவல் வெளியாகியுள்ளது.
மிக நீண்ட நாவலான பொன்னியின் செல்வனை படமாக்குவதற்கு திரைக்கதையில் பல்வேறு மாற்றங்களை இயக்குனர் மணிரத்னம் செய்திருந்தார். குறிப்பாக பாடல்கள் தேவையான இடங்களில் சிறிய பகுதிகளாக மட்டுமே பயன்படுத்தி இருந்தார்.
இந்நிலையில் பாடல்களின் முழு வடிவமும் தற்போது யூ-டியூபில் ஒவ்வொன்றாக வெளியிடப்பட்டு வருகிறது. அதன்படி பொன்னி நதி, தேவராளன் ஆட்டம் உள்ளிட்ட பாடல்கள் வெளியாகி வரவேற்பை பெற்ற நிலையில், தற்போது 'அலைகடல்' பாடலை படக்குழு வெளியிட்டுள்ளது.
'சமுத்திரகுமாரி' பூங்குழலியின் மனநிலையை தத்ரூபமாக விவரிக்கும் வகையில் அலைகடல் பாடல் அமைந்திருப்பதாக ரசிகர்கள் தெரிவித்தனர். இந்த நிலையில், தற்போது அதன் முழுநீள பாடல் காட்சி வடிவமும் ரசிகர்களை வெகுவாக கவர்ந்து வருகிறது.