பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகள் வெளியீடு
|பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது.
சென்னை,
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை இயக்குனர் மணிரத்னம் 2 பாகங்கள் கொண்ட திரைப்படமாக உருவாக்கி இருந்தார். இதன் முதல் பாகம் கடந்த ஆண்டு செப்டம்பர் 30-ந்தேதி திரையரங்குகளில் வெளியாகி மாபெரும் வெற்றி பெற்றது.
அதைத் தொடர்ந்து கடந்த ஏப்ரல் 28-ந்தேதி 'பொன்னியின் செல்வன் 2' திரைப்படம் வெளியாகி நல்ல வரவேற்பைப் பெற்றது. லைகா நிறுவனம் மற்றும் மெட்ராஸ் டாக்கீஸ் இணைந்து தயாரித்திருந்த இந்தப் படத்தில் விக்ரம், ஜெயம் ரவி, கார்த்தி, ஐஸ்வர்யா ராய், த்ரிஷா, ஐஸ்வர்யா லட்சுமி, சரத்குமார், பார்த்திபன், லால் உட்பட பலர் நடித்திருந்தனர்.
பொன்னியின் செல்வர் படத்தின் 2 பாகங்களுக்கும் ஏ.ஆர்.ரஹ்மான் இசையமைத்திருந்தார். அவரது இசையில் பாடல்கள் அனைத்தும் நல்ல வரவேற்பை பெற்றிருந்தன. குறிப்பாக பொன்னி நதி, அகநக, அலைகடல், சின்னஞ்சிறு நிலவே உள்ளிட்ட பாடல்கள் ரசிகர்களை வெகுவாக கவர்ந்தன. அதே போல் படத்தின் பின்னனி இசையும் கவனத்தை ஈர்த்தது.
வழக்கமான வரலாற்றுத் திரைப்படங்கள் போல் இல்லாமல், பொன்னியின் செல்வன் படத்தில் பல்வேறு நவீன இசைக்கோர்ப்புகளை பயன்படுத்த இயக்குனர் மணிரத்னம் கேட்டுக் கொண்டதாகவும், அதன்படியே படத்தின் பின்னனி இசையை அமைத்திருப்பதாகவும் ஏ.ஆர்.ரஹ்மான் தெரிவித்திருந்தார். இதற்கு ரசிகர்களிடமும் நல்ல வரவேற்பு கிடைத்தது. திரைப்படத்தில் பல முக்கியமான காட்சிகளில் பின்னனி இசை தனி கவனத்தைப் பெற்றது.
இந்த நிலையில் பொன்னியின் செல்வன் படத்தின் பின்னனி இசைக்கோர்ப்புகளை படக்குழு தற்போது வெளியிட்டுள்ளது. பொன்னியின் செல்வன் பாகம் 'ஏ' என்ற பெயரில் இந்த இசைக்கோர்ப்புகள் வெளியிடப்பட்டுள்ளன. இது ரசிகர்களிடையே தற்போது வைரலாகி வருகிறது.