உலக அளவில் 500 கோடி வசூலை நெருங்குகிறது பொன்னியின் செல்வன்?
|உலக அளவில் பொன்னியின் செல்வன் படத்தின் வசூல் 500 கோடியை நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
சென்னை,
மணிரத்னம் இயக்கத்தில் கார்த்தி, விக்ரம், ஜெயம் ரவி, ஐஸ்வர்யா ராய், திரிஷா உள்ளிட்ட பல நடிகர், நடிகைகள் நடித்துள்ள 'பொன்னியின் செல்வன்' திரைப்படம் கடந்த செப்டம்பர் 30-ந்தேதி உலகம் முழுவதும் திரையரங்குகளில் வெளியானது. படம் வெளியாவதற்கு முன்பே திரையரங்குகளில் முன்பதிவு டிக்கெட்டுகள் படுவேகமாக விற்றுத் தீர்ந்தன.
கல்கி எழுதிய 'பொன்னியின் செல்வன்' நாவலை அடிப்படையாகக் கொண்டு இந்த திரைப்படம் உருவாக்கப்பட்டுள்ளதால், புதினத்தை படித்தவர்கள் அதனை திரையில் காணும் ஆர்வத்தில் தங்கள் குடும்பங்களோடு தியேட்டர்களுக்குச் சென்றதை காணமுடிந்தது. அதோடு ஏ.ஆர்.ரஹ்மான் இசை, ரவிவர்மனின் ஒளிப்பதிவு, தோட்டா தரணியின் கலை வடிவமைப்பு ஆகியவை படத்திற்கு கூடுதல் பலமாக அமைந்தன.
தமிழ், தெலுங்கு, மலையாளம், கன்னடம் மற்றும் இந்தி ஆகிய 5 மொழிகளில் வெளியான இத்திரைப்படம், தொடக்கம் முதலே பல்வேறு வசூல் சாதனைகளை நிகழ்த்தியது. படம் வெளியான முதல் மூன்று நாட்களில் உலக அளவில் ரூ.200 கோடி வசூலித்தது. 7 நாட்களில் ரூ.300 கோடி வசூலை எட்டியது.
இதில் தமிழகத்தில் மட்டும் ஒரு வாரத்தில் ரூ.124 கோடி வசூலித்தது. படம் வெளியாகி 12 நாட்களில் உலக அளவில் ரூ.450 கோடி வசூலித்தாக படக்குழு அறிவித்தது. இந்த நிலையில் தற்போது பொன்னியின் செல்வன் வெளியாகி 32 நாட்களுக்குப் பிறகு உலக அளவில் 500 கோடி வசூலை நெருங்கியதாக தகவல் வெளியாகியுள்ளது.
பொன்னியின் செல்வன் திரைப்படம் 2 பாகங்களாக மொத்தம் 500 கோடி ரூபாய் பட்ஜெட்டில் உருவாக்கப்பட்டுள்ளது. இந்நிலையில் முதல் பாகம் மட்டுமே உலக அளவில் மிகப்பெரிய வசூல் சாதனையை நிகழ்த்தியுள்ளதால், பொன்னியின் செல்வன் 2-ம் பாகத்தின் மீதான எதிர்பார்ப்பு அதிகரிக்கத் தொடங்கியுள்ளது.