பொன்னியின் செல்வனால் குவியும் வாய்ப்புகள்... மீண்டும் அஜித்குமார் ஜோடியாக திரிஷா?
|விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் அவருக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது.
பொன்னியின் செல்வன் படத்தில் திரிஷா நடித்த குந்தவை கதாபாத்திரத்துக்கு பெரிய வரவேற்பு கிடைத்துள்ளது. அவருக்கு புதிய படங்களில் நடிக்க வாய்ப்புகளும் குவிகின்றன. திரிஷா கைவசம் தற்போது சதுரங்க வேட்டை-2, பொன்னியின் செல்வன் 2-ம் பாகம், த ரோட் ஆகிய படங்களும் மலையாளத்தில் ராம் படமும் கைவசம் உள்ளன. இந்த படங்கள் அடுத்தடுத்து திரைக்கு வர உள்ளன. தற்போது மேலும் 5 புதிய படங்களில் நடிக்க திரிஷாவை கதையுடன் அணுகி டைரக்டர்கள் பேசி வருவதாக கூறப்படுகிறது. லோகேஷ் கனகராஜ் இயக்கத்தில் விஜய் நடிக்கும் 67-வது படத்தில் நாயகியாக நடிக்க திரிஷா பெயர் அடிபடுகிறது. இந்த படத்தின் படப்பிடிப்பு டிசம்பர் மாதம் தொடங்க இருக்கிறது. இந்த நிலையில் விக்னேஷ் சிவன் இயக்கத்தில் அஜித்குமார் அடுத்து நடிக்க உள்ள படத்திலும் அவருக்கு ஜோடியாக திரிஷாவை நடிக்க வைக்க பேச்சுவார்த்தை நடப்பதாக தகவல் வெளியாகி உள்ளது. இதுகுறித்த அறிவிப்பு விரைவில் வெளியாகும் என்று எதிர்பார்க்கப்படுகிறது. ஏற்கனவே ஜி, கிரீடம், மங்காத்தா, என்னை அறிந்தால் ஆகிய படங்களில் இருவரும் ஜோடியாக நடித்துள்ளனர்.