< Back
சினிமா செய்திகள்
ஏலியனுடன் பொங்கல் கொண்டாட்டம்... சிவகார்த்திகேயன் பகிர்ந்த புகைப்படம் வைரல்...!
சினிமா செய்திகள்

ஏலியனுடன் பொங்கல் கொண்டாட்டம்... சிவகார்த்திகேயன் பகிர்ந்த புகைப்படம் வைரல்...!

தினத்தந்தி
|
15 Jan 2024 7:25 PM IST

பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது.

சென்னை,

ஆர்.ரவிகுமார் இயக்கத்தில் சிவகார்த்திகேயன் நடித்துள்ள திரைப்படம் 'அயலான்'. ஏ.ஆர் ரகுமான் இசையில், ரகுல் பிரீத் சிங், யோகி பாபு, கருணாகரன் உள்ளிட்ட பலர் இப்படத்தில் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். இப்படத்தை 24 ஏ.எம். ஸ்டுடியோஸ் மற்றும் கே.ஜே.ஆர். ஸ்டுடியோஸ் நிறுவனம் இணைந்து தயாரித்துள்ளது.

படம் தொடங்கப்பட்டு கிட்டத்தட்ட 6 ஆண்டுகளாகியும் படம் குறித்த எந்த அப்டேட்டும் வெளியாகாததால் ஒருவேளை படம் கைவிடப்பட்டதா என ரசிகர்களிடையே கேள்வி எழுந்தது. அந்த கேள்விகளுக்கு பதிலளிக்கும் வகையில் கடந்த சில மாதங்களுக்கு முன் இப்படத்தின் தயாரிப்பு நிறுவனமான கே.ஜே.ஆர் ஸ்டுடியோஸ் இந்த படம் ஜனவரி 12ம் தேதி வெளியாகும் என அறிவித்து இருந்தது.

அதன்படி பொங்கலை முன்னிட்டு 'அயலான்' திரைப்படம் கடந்த 12ம் தேதி வெளியானது. தமிழகம் முழுவதும் திரையரங்குகளில் குவிந்த சிவகார்த்திகேயன் ரசிகர்கள், ஆர்வமுடன் படத்தை கண்டு ரசித்து வருகின்றனர். படத்தின் வி.எப்.எக்ஸ் காட்சிகள் ஹாலிவுட் படத்திற்கு நிகராக உள்ளதாக ரசிகர்கள் பாராட்டி வருகின்றனர்.

இந்நிலையில் குடும்பத்துடன் பொங்கல் கொண்டாடுவது போன்ற புகைப்படத்தை நடிகர் சிவகார்த்திகேயன் தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்த புகைப்படத்தில் அவர்களின் நடுவே அயலான் படத்தின் ஏலியன் நிற்பது போல எடிட் செய்யப்பட்டு உள்ளது.

அவர் அந்த பதிவில், 'இந்த முறை இது எங்களுக்கு அயலான் பொங்கல். அனைவருக்கும் இனிய தமிழர் திருநாள் நல்வாழ்த்துகள்' என பதிவிட்டுள்ளார். அவரின் இந்த பதிவு தற்போது இணையத்தில் வைரலாகி வருகிறது.

மேலும் செய்திகள்