< Back
சினிமா செய்திகள்
டைரக்டருக்கு போலீஸ் சம்மன்... மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக புதிய படம்?
சினிமா செய்திகள்

டைரக்டருக்கு போலீஸ் சம்மன்... மம்தா பானர்ஜி அரசுக்கு எதிராக புதிய படம்?

தினத்தந்தி
|
28 May 2023 7:15 AM IST

காஷ்மீர் பைல்ஸ், தி கேரளா ஸ்டோரி படங்களின் சர்ச்சைக்கு மத்தியில் தற்போது புதிதாக தயாராகி உள்ள 'தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்' படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பி உள்ளது. மேற்கு வங்கத்தில் நடந்த கலவரங்கள், கற்பழிப்பு சம்பவங்களை மையமாக வைத்து உண்மை சம்பவங்கள் அடைப்படையில் இந்த படத்தை எடுத்து இருப்பதாக தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இந்த படத்தை சனோஜ் மிஸ்ரா டைரக்டு செய்துள்ளார். படத்தின் டிரெய்லர் வெளியாகி பரபரப்பை ஏற்படுத்தி உள்ளது. மேற்கு வங்க மம்தா பானர்ஜி அரசின் செயல்பாடுகளை படத்தில் விமர்சித்து இருப்பதாக கண்டனங்கள் கிளம்பி உள்ளது. படத்துக்கு தடை விதிக்க வேண்டும் என்றும் வற்புறுத்தப்பட்டு உள்ளது. போலீசிலும் புகார் அளித்துள்ளனர்.

இதையடுத்து கொல்கத்தா போலீசார் வழக்குப்பதிவு செய்து டைரக்டர் சனோஜ் மிஸ்ரா நேரில் ஆஜராகி விளக்கம் அளிக்க சம்மன் அனுப்பி உள்ளது. இதற்கு பா.ஜனதா ஆட்சேபனை தெரிவித்து உள்ளது. "கேரளா ஸ்டோரி படத்துக்கு தடை விதித்த மேற்கு வங்க அரசு இப்போது 'தி டைரி ஆப் வெஸ்ட் பெங்கால்' படத்தின் இயக்குனரையும் அடக்கி வைக்க பார்க்கிறது. மேற்கு வங்க மாநிலத்தில் நடக்கும் உண்மை சம்பவங்களைத்தான் படமாக்கி உள்ளனர். தனிமனித சுதந்திரத்தை அடக்கி வைப்பதை மம்தா பானர்ஜி கைவிட வேண்டும்" என்று பா.ஜனதா தலைவர் அமித் மால்வியா விமர்சித்து இருக்கிறார்.

டைரக்டர் சனோஜ் மிஸ்ரா கூறும்போது "மேற்க வங்க அரசை களங்கப்படுத்துவது எங்கள் நோக்கம் அல்ல. சில உண்மைகளை மட்டுமே படத்தில் வைத்துள்ளோம். படப்பிடிப்பு இன்னும் முடியவில்லை'' என்றார்.

மேலும் செய்திகள்