பிரபல கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த் மீது போலீஸ் வழக்குப்பதிவு...!
|இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்துள்ள அவதூறு புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
பிரபல இந்தி கவர்ச்சி நடிகை ராக்கி சாவந்த். இவர் தமிழில் கம்பீரம் படத்தில் நடித்து இருக்கிறார். இந்த நிலையில் தமிழில் தீராத விளையாட்டு பிள்ளை படத்தில் நடித்துள்ள இந்தி நடிகை தனுஸ்ரீ தத்தா அளித்துள்ள அவதூறு புகாரின் பேரில் ராக்கி சாவந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர்.
இதுகுறித்து நடிகை தனுஸ்ரீதத்தா அளித்துள்ள பேட்டியில், "ராக்கி சாவந்தினால் மன அழுத்ததுக்கு ஆளானேன். மீடூ போராட்டம் தீவிரமாக இருந்த நேரத்தில் ராக்கி சாவந்த் என்னைப்பற்றி தகாத வார்த்தைகள் பேசினார். அவர் தெரிவித்த அவதூறு குற்றச்சாட்டினால் நீண்ட காலமாக மன அழுத்தத்தில் இருந்தேன். பெரிய நஷ்டம் ஏற்பட்டது. திருமணம் செய்து கொள்ள முடியாத சிக்கலும் நேர்ந்தது. இதனால் என்மீது ராக்கி சாவந்த் சுமத்திய குற்றச்சாட்டுகள் அடங்கிய ஆதாரங்களை ஓஷிவாலா போலீசாரிடம் அளித்து புகார் செய்தேன். இதையடுத்து ராக்கி சாவந்த் மீது போலீசார் வழக்குப்பதிவு செய்துள்ளனர். அவர் மீது நடவடிக்கை எடுப்பார்கள் என்று நம்புகிறேன்.
ராக்கி சாவந்தின் முன்னாள் கணவரும் அவர் செய்த கொடுமைகளை வெளிப்படுத்தி இருக்கிறார். ராக்கி சாவந்த் நடவடிக்கைகள் தெரிந்தும் அவரை திருமணம் செய்து கொள்கிறார்கள் என்றால் அவர்களைப் போன்ற முட்டாள்கள் இருக்க மாட்டார்கள்'' என்றார்.