< Back
சினிமா செய்திகள்
நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்
சினிமா செய்திகள்

நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை கருத்து தொடர்பாக நடிகை திரிஷாவுக்கு காவல்துறை கடிதம்

தினத்தந்தி
|
1 Dec 2023 11:54 AM IST

எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்க நடிகை திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

சென்னை,

நடிகர் மன்சூர் அலிகான் சமீபத்தில் நடிகை திரிஷா குறித்து சர்ச்சைக்குரிய வகையில் கருத்து தெரிவித்திருந்தார். அந்த வீடியோ சமூக வலைதளங்களில் வேகமாக பரவியது. அவரது பேச்சுக்கு கண்டனம் தெரிவித்து நடிகை திரிஷா தனது 'எக்ஸ்' வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை வெளியிட்டார். திரிஷாவை தொடர்ந்து குஷ்பு உள்ளிட்ட பலரும் கண்டனம் தெரிவித்திருந்தனர்.இதேபோல மன்சூர் அலிகான் பகிரங்க மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லாவிட்டால் அவர் நடிகர் சங்கத்தில் இருந்து நீக்கப்படுவார் என தென்னிந்திய நடிகர் சங்கமும் எச்சரிக்கை விடுத்தது.

இதற்கிடையே மன்சூர் அலிகான் மீது தாமாக முன்வந்து நடவடிக்கை எடுக்குமாறு போலீஸ் டி.ஜி.பி.க்கு தேசிய மகளிர் ஆணையம் உத்தரவிட்டது. இந்த உத்தரவை ஏற்று உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ள சென்னை போலீஸ் கமிஷனர் சந்தீப்ராய் ரத்தோருக்கு, டி.ஜி.பி. சங்கர்ஜிவால் உத்தரவிட்டார். இதைத்தொடர்ந்து மன்சூர் அலிகான் மீது சென்னை ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீசார் 2 பிரிவுகளின் கீழ் வழக்குப்பதிவு செய்தனர். மேலும் சர்ச்சை பேச்சு குறித்து விசாரணைக்கு நேரில் ஆஜராகக்கோரி மன்சூர் அலிகானுக்கு போலீசார் சம்மன் வழங்கினர்.

இந்த சம்மனை ஏற்று நடிகர் மன்சூர் அலிகான் ஆயிரம் விளக்கு அனைத்து மகளிர் போலீஸ் நிலையத்திற்கு நேரில் வந்து விளக்கம் அளித்தார். இதனை தொடர்ந்து, மன்சூர் அலிகான் வெளியிட்ட ஒரு அறிக்கையில், திரிஷாவிடம் மன்னிப்பு கேட்டு இருந்தார். மன்சூர் அலிகான் அறிக்கை வெளியாகி சில மணி நேரங்களில் நடிகை திரிஷா தனது எக்ஸ் தளத்தில் ஒரு பதிவை இட்டுள்ளார். அதில், தவறு செய்வது மனித இயல்பு, அதை மன்னிப்பது தெய்வத்தன்மை" எனக்கூறப்பட்டிருந்தது.

இந்த நிலையில், நடிகை திரிஷா குறித்து நடிகர் மன்சூர் அலிகான் சர்ச்சை வகையில் பேசிய விவகாரம் தொடர்பாக திரிஷா தரப்பிடம் விளக்கம் கேட்டு ஆயிரம் விளக்கு மகளிர் காவல்துறை கடிதம் அனுப்பியுள்ளது. இந்த விவகாரம் தொடர்பாக எழுத்துப்பூர்வமாக விளக்கம் அளிக்கவேண்டும் என திரிஷாவுக்கு காவல்துறை அறிவுறுத்தியுள்ளது.

மேலும் செய்திகள்