சிட்டுக்குருவி முத்தம் கொடுத்த போது... பாடகி பி.சுசீலாவுக்கு கவிஞர் வைரமுத்து புகழாரம்...!
|பிரபல பின்னணி பாடகி பி.சுசீலா குறித்து கவிஞர் வைரமுத்து பதிவிட்ட வாழ்த்து பதிவு வைரலாகி வருகிறது.
சென்னை,
இனிய குரலால் பெரும் புகழ்பெற்ற பி.சுசீலா தமிழ் உள்ளிட்ட அனைத்து இந்திய மொழிகளிலும் 25 ஆயிரத்துக்கும் மேற்பட்ட பாடல்களை பாடி உள்ளார். 1953-ல் 'பெற்றதாய்' படத்தில் பாடகியாக அறிமுகமாகி, மறைந்திருந்து பார்க்கும் மர்மம் என்ன, தமிழுக்கு அமுதென்று பேர், சிட்டுக்குருவி முத்தம் கொடுத்து, உன்னை காணாத கண்ணும் கண்ணல்ல, அமுதே பொழியும் நிலவே, உன்னை நான் சந்தித்தேன், ஆயிரம் நிலவே வா, பார்த்த ஞாபகம் இல்லையோ, நான் பேச நினைப்பதெல்லாம் உள்பட ஆயிரக்கணக்கான காலத்தால் அழிக்க முடியாத பாடல்களை பாடியுள்ளார்.
மத்திய அரசு அவருக்கு பத்மபூஷண் விருதை வழங்கியது. 5 முறை தேசிய விருதுகளையும், 11 மாநில விருதுகளையும் பெற்றுள்ளார். தென்னிந்திய மொழிகளில் அதிக பாடல்கள் பாடி கின்னஸ் சாதனை படைத்துள்ளார். இதனிடையே நேற்று முன்தினம் டாக்டர் ஜெ.ஜெயலலிதா இசை மற்றும் கவின் கலை பல்கலைக்கழகத்தின் 2-வது பட்டமளிப்பு விழா நடைபெற்றது. இந்த விழாவில் திரைப்பட பின்னணி பாடகி பி.சுசீலாவிற்கு டாக்டர் பட்டம் வழங்கி முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின் கவுரவித்தார்.
கவிஞர் வைரமுத்து டாக்டர் பட்டம் பெற்ற பி.சுசீலாவை பாராட்டி தனது எக்ஸ் வலைதள பக்கத்தில் பதிவு ஒன்றை பகிர்ந்துள்ளார். அவர் அதில், 'நீ மலர்ந்தும் மலராத பாடியபோது, என் பாதிமலர்க் கண்களில் மீதி மலர்க் கண்களும் மென்துயில் கொண்டன. சிட்டுக் குருவி முத்தம் கொடுத்தபோது எனக்கு முதல்மீசை முளைத்தது. உன் கங்கைக்கரைத் தோட்டத்தில் நான் கால்சட்டை போட்ட கண்ணனானேன். சொன்னது நீதானாவென்று சொற்களுக்கிடையில் விம்மிய பொழுது என் கண்களில் வெளியேறியது ரத்தம்.
வெள்ளை வெள்ளையாய் காலமகள் கண்திறப்பாள் பாடியபோது என் எலும்பு மஜ்ஜைகளில் குருதியும் நம்பிக்கையும் சேர்ந்து சுரந்தன. நீ காதல் சிறகைக் காற்றினில் விரித்தபோது ஒரு தேவதையின் சிறகடியில்
என் காதல் சம்பவம் நிகழ்ந்தது. நீ கண்ணுக்கு மையழகு பாடவந்தபோது சந்திரனும் சூரியனும் நட்சத்திரமும் கூழாங்கல்லும் என் தமிழும் அழகாயின. எத்துணையோ காயங்களை ஆற்றியபிறகு உன்னை டாக்டர் என்கிறார்கள்.. வாழ்க நீ அம்மா' என்று பதிவிட்டுள்ளார். அந்த பதிவு தற்போது சமூக வலைத்தளங்களில் வைரலாகி வருகிறது.