'பேட்ட ராப்' இசை வெளியீட்டு விழா: நடிகை வேதிகாவை பாராட்டிய பிரபுதேவா
|நடிகை வேதிகா திறமையான நடிகை. இயக்குனர் பாலா படத்தில் சிறப்பாக நடித்தவர் என்று பிரபுதேவா பாராட்டியுள்ளார்.
சென்னை,
தமிழ் சினிமாவில் நடிகராகவும், இயக்குனராகவும், நடன இயக்குனராகவும் வலம் வருபவர் பிரபு தேவா. இவர் தற்போது விஜய் நடிப்பில் உருவாகியுள்ள 'தி கோட்' திரைப்படத்தில் முக்கியமான கதாப்பாத்திரத்தில் நடித்துள்ளார். இதற்கிடையில் எஸ்.ஜே.சினு இயக்கத்தில் பிரபுதேவா நடித்திருக்கும் புதிய திரைப்படம் 'பேட்ட ராப்'. இந்த படத்தில் கதாநாயகியாக வேதிகா நடித்துள்ளார்.
இந்த படத்திற்கு டி.இமான் இசையமைத்துள்ளார். மேலும் விவேக் பிரசன்னா, பகவதி பெருமாள், ரமேஷ் திலக், கலாபவன் ஷாஜோன், மைம் கோபி, ரியாஸ் கான் உள்ளிட்ட பலர் இந்த படத்தில் நடித்துள்ளனர். இந்த படத்தின் படப்பிடிப்பு கடந்த ஆண்டு ஜூன் மாதம் புதுச்சேரியில் தொடங்கி சென்னை உள்ளிட்ட பல்வேறு பகுதியில் நடைபெற்றது. ஆக்சன் என்டர்டெய்னராக தயாராகி இருக்கும் இந்த திரைப்படத்தை ப்ளூ ஹில் பிலிம்ஸ் நிறுவனம் சார்பில் ஜோபி பி. சாம் தயாரித்திருக்கிறார்.
இப்படத்தின் மோசன் போஸ்டர், இரண்டு பாடல்கள் மற்றும் டீசர் ஆகியவை வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இப்படத்திற்கு தணிக்கைக் குழு யு/ஏ சான்றிதழ் வழங்கியுள்ளது. படத்தில் இடம் பெற்றுள்ள 'டான்ஸ் டான்ஸ்' வீடியோ பாடல் வெளியாகி வைரலானது. படத்தில் இடம் பெற்றுள்ள 'வச்சு செய்யுதே' வீடியோ பாடலுக்கு பிரபல பாலிவுட் நடிகை சன்னி லியோன் நடனமாடியுள்ளார்.
இந்நிலையில் இந்த படத்தின் டிரெய்லரை பட குழுவினர் இன்று வெளியிட்டுள்ளனர்.
இந்நிலையில் இப்படத்தின் இசை வெளியீட்டு விழா சென்னையில் நடைபெற்றது. இந்த விழாவில் பிரபுதேவா, வேதிகா உள்ளிட்ட படக்குழுவினர் கலந்து கொண்டனர். அந்த விழாவில் பேசிய பிரபுதேவா, "நான் 11 ஆம் வகுப்பில் பெயில் ஆகிவிட்டேன். அதனால் அதிகமாக படித்தவர்களை பார்க்கும்போது எனக்கு பயமாக இருக்கும். மேலும் பாடல் ஆசிரியர்களை பார்க்கும்போது எனக்குள் பிரமிப்பு ஏற்படும். பாடல் ஆசிரியர் விவேகா போன்றவர்களிடம் பேசி பாடல்களில் ஏதாவது திருத்தம் இருந்தால் அதை செய்யச் சொல்லி அறிவுறுத்துவேன். அவர்கள் அதனைப் பெருந்தன்மையுடன் ஏற்றுக்கொண்டு திருத்தி தருவார்கள். அதாவது நான் எம்.ஜி.ஆர் வழியை பின்பற்றுபவன். அதனால் சில சொற்களை தவிர்க்குமாறு அறிவுறுத்துவேன். பாலிவுட் நடிகர் சல்மான் கானுக்கு, விஜய் நடித்திருந்த சிவகாசி, திருப்பாச்சி போன்ற படங்கள் மிகவும் பிடித்திருந்தது. அந்த படங்களை இயக்கிய பேரரசுவை வியந்து பாராட்டியுள்ளார். என்னிடம் பலமுறை ரீமேக் செய்வது குறித்து பேசி இருக்கிறார். இந்நிலையில் இந்த விழாவில் கலந்து கொள்ள வந்த இயக்குனர் பேரரசுக்கு என்னுடைய நன்றியை தெரிவித்துக் கொள்கிறேன். நடிகை வேதிகா திறமையான நடிகை. கடும் உழைப்பாளி. ஒவ்வொரு காட்சிக்கும் தன்னை நன்றாக தயார்படுத்திக் கொள்வார்.
அப்படி இல்லையென்றால் அவருக்கு இயக்குனர் பாலா படத்தில் வாய்ப்பு கிடைத்திருக்குமா? அவருடைய உழைப்பை கண்டு நான் மிகவும் வியந்து இருக்கிறேன். அவருக்கு என்னுடைய நன்றி. சன்னி லியோன் நடிகை என்பதை தாண்டி அனைவரையும் நேசிக்க கூடியவர். மதிக்கக் கூடியவர். அவர் தன்னுடைய அறக்கட்டளையின் மூலம் ஏராளமான உதவிகளை செய்து வருகிறார்" என்று தெரிவித்துள்ளார் பிரபுதேவா.
'பேட்ட ராப்' திரைப்படம் வருகிற 27-ந் தேதி திரையரங்குகளில் வெளியாக உள்ளது.