லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக்கோரி புகார் மனு
|நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி புகார் மனு அளிக்கப்பட்டுள்ளது.
சென்னை,
ஐஸ்வர்யா ரஜினிகாந்த் இயக்கத்தில் உருவாகியுள்ள திரைப்படம் 'லால் சலாம்'. கிரிக்கெட்டை மையமாக வைத்து உருவாகி உள்ள இந்த திரைப்படத்தில் விக்ராந்த், விஷ்ணு விஷால் ஆகியோர் முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும், இந்த படத்தில் சிறப்பு தோற்றத்தில் நடிகர் ரஜினிகாந்த், முன்னாள் கிரிக்கெட் வீரர் கபில்தேவ் ஆகியோர் நடித்துள்ளனர்.
லைகா நிறுவனம் தயாரித்துள்ள இந்த படத்துக்கு ஏ.ஆர்.ரகுமான் இசையமைத்துள்ளார். விஷ்ணு ரங்கசாமி ஒளிப்பதிவு செய்துள்ளார். 'லால் சலாம்' திரைப்படம் வருகிற 9-ம் தேதி வெளியாக உள்ளது. சமீபத்தில் இந்த படத்தின் டீசர் மற்றும் பாடல்கள் வெளியாகி ரசிகர்களிடையே கவனம் பெற்றது.
இந்த நிலையில், நடிகர் ரஜினிகாந்த் நடித்துள்ள லால் சலாம் படத்துக்கு தடை விதிக்கக் கோரி சென்னை ஆணையரிடம் சமூக ஆர்வலர் ஆ.டி.ஐ. செல்வம் புகார் மனு அளித்துள்ளார். அதில், லால் சலாம் படத்தில் நடித்துள்ள துணை நடிகை தன்யா பாலகிருஷ்ணா தமிழர்களை கொச்சைப்படுத்தும் வகையில் பேசியுள்ளார். படத்தை வெளியிட்டால் சட்டம்-ஒழுங்கு பிரச்சினை ஏற்படும்.
எனவே, 'லால் சலாம்' படத்தை தமிழகத்தில் வெளியிட தடை விதிக்க வேண்டும். மேலும், தமிழ் மக்களின் உணர்வுகளைப் புண்படுத்தி, நிம்மதியாக வாழும் எங்களுக்குள் கலவரத்தை ஏற்படுத்தும் வகையில் படம் எடுத்துள்ள லால் சலாம் படத்தின் இயக்குனரும், நடிகர் ரஜினிகாந்தின் மகளுமான ஐஸ்வர்யா மீது வழக்குப் பதிவு செய்து விசாரணை நடத்த வேண்டும் என புகார் மனுவில் தெரிவித்துள்ளார்.