< Back
சினிமா செய்திகள்
ஒரு கையில் பெரியார், மறு கையில் விநாயகர் - வணங்கான் போஸ்டர் குறித்து அருண் விஜய் விளக்கம்
சினிமா செய்திகள்

'ஒரு கையில் பெரியார், மறு கையில் விநாயகர்' - 'வணங்கான்' போஸ்டர் குறித்து அருண் விஜய் விளக்கம்

தினத்தந்தி
|
25 Jan 2024 1:49 PM IST

நடிகர் அருண் விஜய் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார்.

சென்னை,

1995-ம் ஆண்டில் வெளியான 'முறை மாப்பிள்ளை' படத்தின் மூலம் தமிழ் சினிமாவில் அறிமுகமானவர் நடிகர் அருண் விஜய். இவர் நடிப்பில் வெளியான 'பாண்டவர் பூமி' இவரின் திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனை ஏற்படுத்திய படமாக அமைந்தது. சிறிய இடைவெளிக்கு பிறகு 'என்னை அறிந்தால்' படத்தில் வில்லனாக நடித்து கவனம் ஈர்த்தார்.

இவர் தடையற தாக்க, குற்றம் 23, தடம், சினம், யானை, போன்ற படங்களில் நடித்து ஆக்சன் ஹீரோவாக வலம் வருகிறார். இவர் நடிப்பில் பொங்கலுக்கு வெளியான 'மிஷன் - சாப்டர் 1' படம் மிகப்பெரிய வரவேற்பை பெற்றது.

இவர் தற்போது இயக்குனர் பாலா இயக்கத்தில் 'வணங்கான்' படத்தில் நடித்து வருகிறார். இந்த படத்தில் ரோஷினி பிரகாஷ் , சமுத்திரக்கனி உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரத்தில் நடிக்கின்றனர். முதலில் இந்த படத்தில் நடிகர் சூர்யா நடிப்பதாக இருந்தது பின்னர் சில காரணங்களால் அவர் இந்த படத்தில் இருந்து விலகினார்.

சமீபத்தில் இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் போஸ்டர் வெளியாகி கவனம் பெற்றது. இந்த போஸ்டரில் அருண் விஜய் ஒரு கையில் பெரியார் மற்றும் மற்றொரு கையில் விநாயகர் சிலைகளை வைத்து இருந்தது சர்ச்சையை ஏற்படுத்தியது.

இந்நிலையில் அந்த போஸ்டர் குறித்து நடிகர் அருண் விஜய் விளக்கமளித்துள்ளார். அவர் சமீபத்தில் அளித்த பேட்டியில், 'ஒரு விஷயத்தை மனம் விரும்பி செய்யும்போது கஷ்டம் தெரியாது. பாலா படத்தில் நடிக்க மாட்டோமா என ஏங்கியுள்ளேன். ஆனால் அப்படி ஒரு வாய்ப்பு வரும்போது சிறப்பாக கொடுக்கவேண்டும் என்று உறுதியாக இருக்கிறேன். அவரது எதிர்பார்ப்பு எனக்கு தெரியும்.

எனவே ஆரம்பத்திலேயே நாங்கள் 'செட்' ஆகிவிட்டோம். இருவரும் ஒரே ரேசில் ஓடும் குதிரைகளாகி விட்டோம். இந்தப் படம் எனது திரைப்பயணத்தில் மிகப்பெரிய திருப்புமுனையாக இருக்கும் என்று எதிர்பார்க்கிறேன். போஸ்டரில் இடம்பெற்ற அந்த சிலைகள் முழுக்க முழுக்க பாலாவின் சிந்தனை. படம் பார்க்கும்போது அது ஏன்? என்பது அனைவருக்கும் தெரியும்' என்று தெரிவித்துள்ளார்.

மேலும் செய்திகள்