ஹெல்மெட் அணியாததற்கு அபராதம்: நடிகர் பிரசாந்த் விளக்கம்
|ஹெல்மெட் குறித்து விழிப்புணர்வு ஏற்படுத்தி, இலவசமாக ஹெல்மெட் வழங்கி வருவதாகவும், ஹெல்மெட் அணிந்து வாகனம் ஓட்டுவது உங்களது குடும்பத்திற்கும் முக்கியம் எனவும் நடிகர் பிரசாந்த் கூறியுள்ளார்.
சென்னை,
நடிகர் பிரசாந்தின் 'அந்தகன்' திரைப்படம் வரும் ஆகஸ்ட் 9-ம் தேதி திரைக்கு வருகிறது. இதனையொட்டி நடிகர் பிரசாந்த் படத்தின் புரமோஷன் பணிகளில் தீவிரமாக ஈடுப்பட்டு வருகிறார். அதன் ஒரு பகுதியாக அவர் தனியார் யூடியூப் சேனல் ஒன்றுக்கு பேட்டி அளித்திருந்தார். இருசக்கர வாகனத்தை ஓட்ட கற்றுக்கொண்ட அனுபவங்களை பகிரும் அந்தப் பேட்டியில் பைக் ஓட்டிக்கொண்டே பேசியிருந்தார். அவருக்குப் பின்னால் தொகுப்பாளர் அமர்ந்திருந்தார். இருவரும் ஹெல்மெட் அணியாமல் பயணிக்கும் அந்த வீடியோ சமூக வலைதளங்களில் பகிரப்பட்டது.
அந்த வீடியோவில் நடிகர் பிரசாந்த் ஹெல்மெட் அணியாமல் பைக்கை ஓட்டியிருக்கிறார். அதன் காணொளி இணையத்தில் வெளியானது. அதைப் பார்த்த நெட்டிசன்கள் "எல்லா விதிமுறைகளும் சாதாரண மக்களுக்கு மட்டும்தானா?" என கேள்விகளை எழுப்பி போக்குவரத்து காவல்துறையையும் டேக் செய்து கமெண்ட் செய்தனர். இந்நிலையில், நடிகர் பிரசாந்த் மற்றும் அந்த நேர்காணலின் தொகுப்பாளர் ஆகிய இருவரும் தலைக்கவசம் அணியாமல் விதிமீறலில் ஈடுப்பட்டதாக சென்னை பெருநகர காவல்துறை ரூ 2 ஆயிரம் அபராதம் விதித்துள்ளது.
தங்களை நோக்கி கேள்வி எழுப்பியோருக்கு பதில் அளிக்கும் விதமாக, பிரசாந்த் 'ஹெல்மெட்' போடாமல் மோட்டார் சைக்கிள் ஓட்டிய புகைப்படத்தையும், அபராதம் விதிக்கப்பட்ட ரசீதையும் வலைதளத்தில் வெளியிட்டார்.
இந்நிலையில் திருச்சியில் செய்தியாளர்களுக்கு பேட்டி அளித்த நடிகர் பிரசாந்த் கூறியதாவது:
கடந்த ஒரு வருட காலமாக ஹெல்மெட் விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். தமிழ்நாடு முழுவதும் இலவசமாக ஹெல்மெட் வழங்கி இருக்கிறேன். நீங்களும் அந்த செய்தியை வெளியிட்டுள்ளிர்கள். ஹெல்மெட் வழங்கி, ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க என்று விழிப்புணர்வு ஏற்படுத்தி இருக்கிறேன். பாதுகாப்பாக வண்டி ஓட்டுங்க, நிதானமாக ஓட்டுங்க என்று நான் சொல்லிக்கொண்டு இருக்கிறேன்.
இப்போது இந்த நிகழ்வு மூலமாக எனக்கு மேலும் ஒரு பிளாட்பார்ம் கிடைத்து இருக்கிறது. தயவுசெய்து ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. நீங்கள் வெளியே செல்லும்போது 5 நிமிடம் முன்பே கிளம்புங்கள். அவசரமாக வண்டி ஓட்டாதீர்கள். உங்களுக்கும் குடும்பம் இருக்கிறது. ஹெல்மெட் போட்டு வண்டி ஓட்டுங்க. பாதுகாப்பாக இருங்க" என்று கூறினார்.