பவன் கல்யாண் நேரம் தொடங்குகிறது... 'ஓஜி' படக்குழு வெளியிட்ட போஸ்டர்
|பிதாபுரம் தொகுதியில் ஜன சேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
பெங்களூரு,
நாடாளுமன்ற தேர்தலுடன் ஆந்திரா, ஒடிசா, அருணாசலபிரதேசம், சிக்கிம் ஆகிய 4 மாநில சட்டமன்றங்களுக்கும் தேர்தல் நடைபெற்றது. இதில் அருணாசலபிரதேசம் மற்றும் சிக்கிம் மாநிலங்களுக்கு 2-ம் தேதியே வாக்குகள் எண்ணப்பட்டு முடிவுகள் அறிவிக்கப்பட்டன. இந்த நிலையில், நாடாளுமன்ற தேர்தல் மற்றும் ஆந்திரா, ஒடிசா சட்டமன்றத் தேர்தலில் பதிவான வாக்குகள் இன்று எண்ணப்பட்டு வருகின்றன.
ஆந்திராவில் உள்ள மொத்த சட்டப்பேரவை தொகுதிகளின் எண்ணிக்கை 175 ஆகும். இதில் 88 இடங்களை வெல்லும் கட்சி ஆட்சியை பிடிக்கும். இந்த தேர்தலில் முதல்-மந்திரி ஜெகன் மோகன் ரெட்டி தலைமையிலான ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி அனைத்து இடங்களிலும் தனித்து போட்டியிட்டது. பா.ஜ.க. தலைமையிலான தேசிய ஜனநாயக கூட்டணியில் தெலுங்கு தேசம் கட்சி 144 இடங்களிலும், ஜனசேனா கட்சி 21 இடங்களிலும், பா.ஜ.க. 10 இடங்களிலும் போட்டியிட்டது.
ஜன சேனா கட்சி தலைவரும் நடிகருமான பவன் கல்யாண் இந்த சட்டமன்ற தேர்தலில் பிதாபுரம் தொகுதியில் போடியிட்டார். அந்த தொகுதியில் ஒய்.எஸ்.ஆர். காங்கிரஸ் கட்சி சார்பில் வங்கா கீதா விஸ்வநாத் போட்டியிட்டார். தற்போதைய நிலவரப்படி, பவன் கல்யாண் 1,34,394 வாக்குகள் பெற்றுள்ளார். வங்கா கீதாவை விட 70,279 வாக்குகள் வித்தியாசத்தில் முன்னிலையில் உள்ளார். கிட்டத்தட்ட பிதாபுரம் தொகுதியில் பவன் கல்யாண் வெற்றியை உறுதி செய்துள்ளார்.
இந்த நிலையில் இந்த வெற்றியை கொண்டாடும் வகையில் பவன் கல்யாண் நடிக்கும் தே கால் ஹிம் ஓஜி (They Call Him OG) படக்குழு புதிய போஸ்டர் ஒன்றை வெளியிட்டுள்ளது. இந்த போஸ்டரில் நெருப்பு பற்றி எரியும் நாற்காலியில் பவன் கல்யாண் அமர்ந்திருப்பது போன்ற காட்சி இடம்பெற்றுள்ளது. இந்த போஸ்டர் தற்போது சமூக வலைதளங்களில் வைரலாகி வருகிறது. இந்த படத்தில் இம்ரான் ஹாஷ்மி, பிரியங்கா அருள் மோகன், அர்ஜுன் தாஸ் உள்ளிட்ட பலர் முக்கிய கதாபாத்திரங்களில் நடிக்கின்றனர்.