ஷாருக்கான் படத்துக்கு வலுக்கும் எதிர்ப்பு
|உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும் என்றும் கூறியுள்ளனர்.
ஷாருக்கான், தீபிகா படுகோனே 'பதான்' இந்தி படத்தில் ஜோடியாக நடித்துள்ளனர். இந்த படம் தமிழ், தெலுங்கு, கன்னடம், மலையாளம் உள்ளிட்ட மொழிகளிலும் பான் இந்தியா படமாக அடுத்த மாதம் திரைக்கு வருகிறது. பதான் படத்தில் இடம்பெற்றுள்ள தீபிகா படுகோனேவின் கவர்ச்சி குத்தாட்ட பாடல் காட்சி வெளியாகி சர்ச்சையை ஏற்படுத்தியது. பாடலில் தீபிகா படுகோனே காவி உடை அணிந்து இந்துக்கள் மனதை புண்படுத்தி உள்ளதாக எதிர்ப்புகள் கிளம்பின. ஷாருக்கான் கொடும்பாவியை எரித்தனர்.
மத்திய பிரதேச உள்துறை மந்திரி நரோத்தம் மிஸ்ரா கூறும்போது, ''பாடல் காட்சியில் இடம்பெற்றுள்ள உடை மற்றும் பாடல் வரிகளை நீக்க வேண்டும்'' என்றார். பதான் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக்கும் டிரெண்டானது.
இந்த நிலையில் பதான் படத்துக்கு இஸ்லாமிய அமைப்புகளும் எதிர்ப்பு தெரிவித்து உள்ளன. மத்திய பிரதேசத்தை சேர்ந்த உலமாக்கள் பதான் படத்தில் அளவுக்கு மீறிய ஆபாச காட்சிகள் இருப்பதாகவும் இஸ்லாமிய உணர்வுகளை பாதிக்கும் பதான் படத்தை தீவிரமாக தணிக்கை செய்ய வேண்டும்'' என்றும் கூறியுள்ளனர்.
பதான் திரைப்படம் ஓடும் திரையரங்குகளை தீயிட்டு கொளுத்தவேண்டும் என அயோத்தியின் ஹனுமன் காரி அமைப்பு எச்சரிக்கை விடுத்து உள்ளது.