சோகத்தை புதைத்துக் கொண்டு...! அது தான் அவர் பண்பு...! அஜித் குறித்து பார்த்திபன்
|தந்தையின் உடலை மின் மயானத்தின் உள்ளே கொண்டு சென்ற போது அஜித் சோகமாக தனது தந்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
சென்னை
நடிகர் அஜித் குமாரின் தந்தை மணி என்கிற சுப்ரமணியன் (85) நேற்று அதிகாலை காலமானார். சென்னை பெசன்ட் நகர் மயானத்தில் அவரது உடல் தகனம் செய்யப்பட்டது. தந்தை மறைவால் சோகத்தில் இருக்கும் அஜித் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு பலரும் நேரில் மற்றும் சமூக ஊடகங்களில்ஆறுதல் கூறி வருகின்றனர்.
நடிகர் விஜய், பார்த்திபன், மிர்ச்சி சிவா, சிம்பு உள்ளிட்டோர் நேரில் சென்று அஜித்திற்கு ஆறுதல் கூறியிருந்தனர். டுவிட்டர் பக்கம் வாயிலாக கமல், விக்ரம், சிம்பு, பிரசன்னா, சிம்ரன் உள்ளிட்ட பலர் ஆறுதல் கூறி இருந்தனர். மேலும் அரசியல் தலைவர்கள் முதல்-அமைச்சர் மு.க.ஸ்டாலின், எடப்பாடி பழனிசாமி, விஜயகாந்த், திருமாவளவன், எச்.ராஜா உள்ளிட்ட பலரும் ஆறுதல் கூறி பதிவிட்டிருந்தனர்.
நேற்று நண்பகல் 12.15 மணிக்கு பி.எஸ் மணியின் உடல் பெசன்ட் நகர் மின்மயானத்திற்கு கொண்டு செல்லப்பட்டது. இந்த நிகழ்வில் அஜித்தின் குடும்ப உறுப்பினர்கள் மட்டுமே கலந்து கொண்டார்கள். இது குடும்ப நிகழ்வு, தான் தனியாக இந்த சடங்குகளை தனிப்பட்ட முறையில் செய்ய ரசிகர்கள் ஒத்துழைப்பு நல்க வேண்டும் என அஜித் கேட்டு கொண்டிருந்தார்.
இறுதி சடங்கில் ஷாலினியின் அண்ணன் ராபர்ட், தங்கை ஷாமிலி உள்ளிட்டோர் கலந்து கொண்டனர். தனது மாமியாரின் கையை பிடித்து அழைத்து வந்தார் ஷாலினி். தந்தையின் உடலை மின் மயானத்தின் உள்ளே கொண்டு சென்ற போது அஜித் சோகமாக தனது தந்தை முகத்தை பார்த்துக் கொண்டிருந்தார்.
இந்த நிலையில், இறுதி ஊர்வலத்தில் அஜித்தின் பண்பு குறித்து நடிகரும், இயக்குநருமான பார்த்திபன் தனது டுவிட்டர் பக்கத்தில் பகிர்ந்துள்ளார். அந்தப் பதிவில், "தந்தையின் மறைவின் போது, நண்பர் அஜித் உள்ளூரில் இருந்தது நல்லது. சோகத்தைப் புதைத்துக் கொண்டு வந்தவர்களுக்கு நன்றி சொன்னார். மயானம் செல்லத் தயாரானபோது காரில் அமர்ந்தவர், என் அருகில் சோழா பொன்னுரங்கம் (அமராவதி தயாரிப்பாளர்) நிற்பதைக் கண்டு இறங்கி வந்து நன்றி சொல்லிச் சென்ற பண்பு அவருக்கானது" எனக் குறிப்பிட்டுள்ளார்.