உடல்நிலை வதந்திக்கு பார்த்திபன் விளக்கம்
|உடல்நிலை வதந்திக்கு நடிகர் பார்த்திபன் டுவிட்டர் பதிவில் விளக்கம் அளித்துள்ளார்.
நடிகர் பார்த்திபன் உடல்நிலை குறித்து வலைத்தளத்தில் தவறான தகவல் பரவியது. இதனை பார்த்த பலரும் அதிர்ச்சியானார்கள். உடல்நிலை குறித்து விசாரிக்கவும் செய்தார்கள்.
இந்த வதந்திக்கு பதிலடி கொடுத்து பார்த்திபன் டுவிட்டரில் வெளியிட்டுள்ள பதிவில், "நொடிகள் மரணமடைவதும், மறுபடியும் அடுத்ததாய் உயிர்த்தெழுவதும் இயற்கை. நடிகன் பற்றிய செய்திகள் இப்படி ஊர்வலமாவதன் காரணம் புரியவில்லை. 'நெகட்டிவிட்டி'யை பரப்ப இதுபோல் சில நண்பர்கள் இருக்கிறார்கள். மகிழ்ச்சியை மனதில் நிரப்புவோம். மக்களுக்கும் பரப்புவோம்" என்று கூறியுள்ளார்.
பார்த்திபன் ஒருவரே நடித்து இயக்கிய ஒத்த செருப்பு படம் விருதுகளை பெற்றது. கடந்த வருடம் பார்த்திபன் நடிப்பில் யுத்த சத்தம், இரவின் நிழல், பொன்னியின் செல்வன் ஆகிய படங்கள் வந்தன. இரவின் நிழல் படத்தை பார்த்திபனே இயக்கி கதாநாயகனாக நடித்து இருந்தார். இந்த படத்துக்கு பாராட்டுகள் கிடைத்தன.
பொன்னியின் செல்வன் படத்தில் சின்ன பழுவேட்டரையர் கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். அடுத்து 3 புதிய படங்களை தயாரிக்க இருக்கிறார்.