'ஜமா' படத்தின் பர்ஸ்ட் சிங்கிள் வெளியானது
|நடிகை அம்மு அபிராமி நடிக்கும் ‘ஜமா’ திரைப்படத்தின் முதல் பாடலான 'நீ இருக்கும் ஒசரத்துக்கு' என்ற பாடல் வெளியாகி வைரலாகி வருகிறது.
சென்னை,
'கூழாங்கல்' திரைப்படத்தை உருவாக்கிய லெர்ன் அண்ட் டெக் புரோடக்சன் நிறுவனம் தமிழ்நாட்டில் உள்ள தெருக்கூத்து கலைஞர்களின் வாழ்க்கைமுறை மற்றும் சவால்களை மையமாக வைத்து 'ஜமா' என்ற மற்றொரு யதார்த்தமான படத்துடன் சினிமா ரசிகர்களை கவரத் தயாராக உள்ளது. பாரி இளவழகன் இந்தப் படத்தை இயக்கி முக்கிய கதாபாத்திரத்திலும் நடித்துள்ளார்.
தமிழ்நாட்டின் பாரம்பரியம் மற்றும் அழகியல் கலாச்சாரமான தெருக்கூத்தை மையமாக வைத்து இப்படம் உருவாகியுள்ளதாக அவர் கூறுகிறார். 'ஜமா' என்ற தலைப்பு தெருக்கூத்து நாடகக் கலைஞர்களின் குழுவைக் குறிக்கிறது. இந்தக் கதை அவர்களின் அனுபவங்களை மையமாகக் கொண்டு திருவண்ணாமலையில் நடந்ததாக படமாக்கப்பட்டுள்ளது.
பிரபல தெருக்கூத்து கலைஞர் கலைமாமணி தாங்கல் சேகர் நடிகர்களுக்கு தெருக்கூத்து பயிற்சி அளித்தார். இசையமைப்பாளர் இசைஞானி இளையராஜா பாடல்களில் மிகைப்படுத்தலை தவிர்த்து, உண்மையான தெருக்கூத்து இசையைப் பயன்படுத்தியதால் படம் இயல்பாக வந்துள்ளது.
அம்மு அபிராமி, சேத்தன் உள்ளிட்ட நடிகர்கள் நடித்துள்ளனர்.கோபால கிருஷ்ணா ஒளிப்பதிவு செய்கிறார். பார்த்தா எம்.ஏ. படத்தொகுப்பாளராகவும், ஸ்ரீகாந்த் கோபால் கலை இயக்குநராகவும் பணியாற்றுகிறார். திரைப்படமானது வரும் ஆகஸ்ட் 2 -ம் தேதி இப்படம் திரைக்கு வருகிறது.
அம்மு அபிராமி தமிழ் சினிமாவில் வளர்ந்து வரும் இளம் நடிகைகளின் ஒருவர். இவர் பைரவா திரைப்படத்தின் மூலம் ரசிகர்கள் மத்தியில் பிரபலமானவர். அதைத்தொடர்ந்து இவர் விஷ்ணு விஷாலின் ராட்சசன், தனுஷின் அசுரன் போன்ற படங்களில் முக்கிய கதாபாத்திரத்தில் நடித்து ரசிகர்கள் மனதில் நீங்கா இடம் பிடித்தார்.
இந்த படத்தின் பர்ஸ்ட் லுக் மற்றும் டீசர் வெளியாகி ரசிகர்கள் மத்தியில் நல்ல வரவேற்பை பெற்றது. இந்நிலையில் 'ஜமா' திரைப்படத்தின் முதல் பாடலான 'நீ இருக்கும் ஒசரத்துக்கு' என்ற பாடல் இன்று காலை வெளியானது.