ஆஸ்கார் விருதை வென்ற ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2-ம் பாகம் உருவாகிறது
|ராஜமவுலி இயக்கத்தில் ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர் ஆகியோர் நடித்த ஆர்.ஆர்.ஆர் படம் தமிழ், தெலுங்கு, இந்தி, கன்னடம், மலையாளம் மொழிகளில் பான் இந்தியா படமாக வெளியாகி வெற்றி பெற்றது. இந்த படத்தில் இடம்பெற்ற 'நாட்டு... நாட்டு...' பாடல் 'ஆஸ்கார்' விருதையும் கோல்டன் குளோப் விருதையும் வென்று உலக அளவில் கவனம் பெற்றது.
ஆர்.ஆர்.ஆர். படத்தின் 2-ம் பாகம் வெளிவருமா? என்ற எதிர்பார்ப்பு ரசிகர்களிடம் இருந்தது. இந்தநிலையில் 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 2-ம் பாகத்துக்கு திட்டமிடப்பட்டு உள்ளதாக, அப்படத்தின் திரைக்கதை ஆசிரியரும், ராஜமவுலியின் தந்தையுமான விஜயேந்திர பிரசாத் தெரிவித்துள்ளார்.
இதுகுறித்து அவர் கூறும்போது, 'ஆர்.ஆர்.ஆர்.' படத்தின் 2-ம் பாகம் உருவாக்கும் திட்டம் உள்ளது. ராம்சரண், ஜூனியர் என்.டி.ஆர். 2-ம் பாகம் படத்திலும் நடிப்பார்கள். ஹாலிவுட் தரத்தில் இந்த படம் இருக்கும். முன்னணி ஹாலிவுட் பட நிறுவனம் தயாரிக்க இருக்கிறது. ராஜமவுலி அல்லது அவரின் மேற்பார்வையில் வேறு யாராவது இயக்கலாம்'' என்றார்.
'ஆர்.ஆர்.ஆர்' படத்தின் 2-ம் பாகம் குறித்த தகவல் ரசிகர்களுக்கு மகிழ்ச்சியை அளித்திருக்கிறது. முதல் பாகத்தை போலவே 2-ம் பாகத்தையும் ராஜமவுலியே இயக்கவேண்டும் என்று அவர்கள் வலியுறுத்தி வருகிறார்கள்.