விஜய் தேவரகொண்டா படத்துக்கு எதிர்ப்பு
|விஜய் தேவரகொண்டா நடித்துள்ள லைகர் படத்துக்கு எதிர்ப்பு வலுத்துள்ளது.
சமீபத்தில் இந்தி நடிகர் அமீர்கான் நடித்து திரைக்கு வந்த லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்கும்படி வலைத்தளத்தில் பலர் வற்புறுத்தியதை விஜய்தேவரகொண்டா கண்டித்ததும், இந்தி டைரக்டர் கரண் ஜோகர் லைகர் படத்தின் தயாரிப்பாளராக இருப்பதும் எதிர்ப்புக்கு காரணம் என்கின்றனர். லைகர் படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக் டிரெண்டிங் ஆகி வருகிறது. சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பங்கேற்ற விஜய் தேவரகொண்டா ஷூ அணிந்த காலை மேசையில் வைத்தபடி நாற்காலியில் அமர்ந்து இருந்த புகைப்படம் வெளியாகி அதுவும் அவருக்கு எதிர்ப்பை உருவாக்கி உள்ளது. இதுகுறித்து விஜய்தேவரகொண்டா கூறும்போது, ''வளருகிறவர்கள் குறி வைக்கப்படுவது சகஜம்தான். நேர்மையானவர்கள் பக்கம் கடவுள் இருப்பார். 3 ஆண்டுகளாக உயிரை கொடுத்து லைகர் படத்தை எடுத்து இருக்கிறோம். அந்த படத்தை புறக்கணிக்கும்படி அழைப்பு விடுத்து இருப்பது வேதனையாக உள்ளது. இதற்கெல்லாம் நான் பயப்பட மாட்டேன். இந்த படம் எம்.குமரன் சன் ஆப் மகாலட்சுமி படத்தின் இரண்டாம் பாகம் என்பது தவறு. அந்த கதையும் இதுவும் வேறு" என்றார்.