< Back
சினிமா செய்திகள்
அலியாபட் படத்துக்கு எதிர்ப்பு
சினிமா செய்திகள்

அலியாபட் படத்துக்கு எதிர்ப்பு

தினத்தந்தி
|
25 Aug 2022 12:45 PM IST

அலியாபட் நடித்த பிரம்மாஸ்திரா படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர்.

இந்தியில் சமீபத்தில் வெளியான பல படங்கள் தோல்வியை சந்தித்து தயாரிப்பாளர்களுக்கு அதிர்ச்சி கொடுத்து வருகின்றன. முன்னணி நடிகர்-நடிகைகள் படங்களை புறக்கணிக்கும்படி சமூக வலைத்தளத்தில் ஹேஷ்டேக் டிரெண்ட் செய்யும் போக்கும் அதிகரித்து வருகிறது.

அமீர்கான் நடித்து சில தினங்களுக்கு முன்பு திரைக்கு வந்த லால் சிங் சத்தா படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக் டிரெண்ட் ஆனது. அமீர்கானின் சர்ச்சை பேச்சு வீடியோவையும் பகிர்ந்தனர். அந்த படம் தோல்வி அடைந்தது. இதுபோல் விஜய்தேவரகொண்டா நடித்த லைகர் படத்துக்கும் எதிர்ப்பு கிளம்பியது. இந்த வரிசையில் தற்போது இந்தி நடிகை அலியாபட், ரன்பீர் கபூர் நடித்து திரைக்கு வர உள்ள பிரம்மாஸ்திரா படமும் சேர்ந்துள்ளது. அலியா பட் சில தினங்களுக்கு முன்பு ''என்னை பிடிக்கவில்லை என்றால் என்னுடைய படத்தை பார்க்க வேண்டாம்" என்று பேசி இருந்தார்.

அவர் பேசிய வீடியோவை வலைத்தளத்தில் பகிர்ந்து பிரம்மாஸ்திரா படத்தை புறக்கணிக்கும்படி ஹேஷ்டேக் டிரெண்ட் செய்து வருகின்றனர். இதனால் அமீர்கானின் லால் சிங் சத்தா படத்தைப்போல் பிரம்மாஸ்திராவுக்கும் பாதிப்பு ஏற்படுமோ என்று படக்குழுவினர் கலக்கத்தில் உள்ளனர்.

மேலும் செய்திகள்