நடிகர் கிஷோருக்கு எதிர்ப்பு
|நடிகர் கிஷோருக்கு கன்னட திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியது.
வில்லன் மற்றும் குணசித்திர வேடங்களில் நடித்து வரும் கிஷோர் சமீப காலமாக சமூக கருத்துகளையும் பகிரங்கமாக வெளியிட்டு வருகிறார். விவசாயிகள் பிரச்சினைகள் பற்றி பேசினார். காஷ்மீர் பண்டிட்கள் குறித்து நடிகை சாய்பல்லவி தெரிவித்த கருத்துக்கு எதிர்ப்பு கிளம்பியதும் அவருக்கு கிஷோர் ஆதரவு தெரிவித்தார்.
இந்த நிலையில் கன்னட நடிகர் யாஷ் நடித்து தமிழ் தெலுங்கு, இந்தி மொழிகளில் வெளியாகி ரூ.1000 கோடிக்கு மேல் வசூல் குவித்து பெரிய வெற்றி படமாக அமைந்த கே.ஜி.எப். படத்தை விமர்சித்து கருத்து தெரிவித்தார். கிஷோர் கூறும்போது, ''எனக்கு கே.ஜி.எப். போன்ற படங்கள் பிடிக்காது. கே.ஜி.எப். படத்தின் இரண்டாம் பாகத்தை பார்க்கவில்லை.
இதுபோன்ற படங்களுக்கு பதிலாக நல்ல கதையம்சம் உள்ள படங்களுக்கு ஆதரவு தெரிவிக்கலாம்'' என்று கூறினார். இதையடுத்து கிஷோருக்கு கன்னட திரையுலகில் எதிர்ப்பு கிளம்பியது. கன்னட ரசிகர்கள் கிஷோரை கண்டித்தனர். கே.ஜி.எப். படம் அர்த்தமற்ற படம் என்று கிஷோர் பேசியதாகவும் பலர் சாடினர். இந்த நிலையில் கே.ஜி.எப். அர்த்தமற்ற படம் என்று நான் பேசவில்லை என்று கிஷோர் விளக்கம் அளித்துள்ளார்.