இந்தி படங்களில் வாய்ப்பு... நடிகை பிரியாமணி மகிழ்ச்சி
|தமிழில் 'பருத்தி வீரன்' படத்தின் மூலம் தேசிய விருது பெற்ற பிரியாமணி முன்னணி கதாநாயகியாக வலம் வந்தார். தெலுங்கு, கன்னட படங்களிலும் நடித்துள்ளார். திருமணத்துக்கு பிறகும் தொடர்ந்து நடிக்கிறார்.
இந்தியில் நடித்த பேமிலிமேன் வெப் தொடர் பெரிய வரவேற்பை பெற்று நிறைய இந்திபட வாய்ப்புகளை அவருக்கு பெற்றுக்கொடுத்து உள்ளது. இதுகுறித்து பிரியாமணி அளித்துள்ள பேட்டியில், ''மும்பை என்னை மிகவும் அன்பாக வரவேற்று உள்ளது. பேமிலிமேன் வெப் தொடர் மூலம் இந்திபட உலகில் தொழில் ரீதியாக எனக்கு அதிக வரவேற்பு கிடைத்துள்ளது.
ஒரு நடிகைக்கு இதைவிட வேறு என்ன வேண்டும். இது உண்மையில் எனக்கு நல்ல காலகட்டம். முன்பை விட நான் தற்போது மிகவும் பிஸியாக இருக்கிறேன். இந்தியில் அஜய் தேவ்கன், அர்ஜுன் ராம் பால் போன்றவர்களோடு இணைந்து பணியாற்றும் வாய்ப்பு கிடைத்தது மிகவும் மகிழ்ச்சியாக உள்ளது. அதேபோல தென்னிந்திய நடிகர் நடிகைகளுக்கும் டெக்னீசியன்களுக்கும் உலக அளவில் அடையாளம் கிடைத்திருப்பது சந்தோஷமாக உள்ளது'' என்றார்.