< Back
சினிமா செய்திகள்
மீ டூவுக்கு எதிரான கருத்து: சவுகார் ஜானகிக்கு சின்மயி கண்டனம்
சினிமா செய்திகள்

'மீ டூ'வுக்கு எதிரான கருத்து: சவுகார் ஜானகிக்கு சின்மயி கண்டனம்

தினத்தந்தி
|
15 March 2024 11:31 PM IST

பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குவதைத்தான் மீ டூ' குறித்து பேசும் வீடியோவில் சவுகார் ஜானகி, ஒய்.ஜி.மகேந்திரன் செய்கிறார்கள் என பாடகி சின்மயி தெரிவித்துள்ளார்.

சினிமா துறையில் சில ஆண்டுகளுக்கு முன்பு பாலியல் தொல்லைகளை அம்பலப்படுத்திய 'மீ டூ' இயக்கம் பரபரப்பானது. பல நடிகைகள் தங்களுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமைகளை, 'மீ டூ'-ல் பகிர்ந்து வந்தனர். இன்னொரு புறம் 'மீ டூ' தவறாக பயன்படுத்தப்படுவதாக விமர்சனங்கள் கிளம்பின.

இந்த நிலையில் பழம்பெரும் நடிகை சவுகார் ஜானகி, நடிகர் ஒய்.ஜி.மகேந்திரனுடன் 'மீ டூ' குறித்து பேசும் ஒரு வீடியோவை, பாடகி சின்மயி தற்போது சமூக வலைதளத்தில் பகிர்ந்துள்ளார்.

அந்த வீடியோவில் சவுகார் ஜானகி பேசும்போது, 'மீ டூ'வில் கீழ்த்தரமான விஷயத்தை செய்கிறார்கள். என்றைக்கோ நடந்த விஷயத்தை அதுவும் தான் ஒத்துக்கொண்ட ஒரு விஷயத்தை, இப்போது வேறு மாதிரி பேசுகிறார்கள். அன்றைக்கு வாயை மூடிக்கொண்டு இருந்துவிட்டு, இப்போது வந்து சொல்வது கேவலம்.

'மீ டூ' வந்த பிறகு தொலைக்காட்சி பார்ப்பதையே நிறுத்திவிட்டேன். என்றைக்கோ ஒருவன் பின்னாடி வந்து கையை பிடித்தான், இழுத்தான் என்று சொல்வதால் என்ன மரியாதை இருந்து விடப்போகிறது? நான் பெண்களுக்காக போராடுகிறேன். ஆனால் இருபது வருடங்களுக்கு முன்பு நடந்த விஷயங்களை இப்போது வந்து பரிதாபமாக சொல்வதை எல்லாம் ஏற்றுக்கொள்ள மாட்டேன்' என்று சவுகார் ஜானகி கூறியுள்ளார்.

இந்த வீடியோவை பகிர்ந்துள்ள பாடகி சின்மயி, அத்துடன் "பாதிக்கப்பட்டவர்களை குற்றவாளிகளாக்குவதைத்தான் இந்த வீடியோவில் சவுகார் ஜானகி, ஒய்.ஜி.மகேந்திரன் செய்கிறார்கள். பெண்ணைப் பற்றி பாடம் எடுக்க அரைவேக்காடுகள் இந்த வீடியோவை தேர்ந்தெடுத்ததில் ஆச்சரியம் எதுவும் இல்லை" என்று காட்டமாக கூறியுள்ளார்.

மேலும் செய்திகள்