இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க கனவிலும் வராது - விஜய் ஆண்டனி
|இயேசு கிறிஸ்து குறித்து தான் தவறாக எதுவும் சொல்லவில்லை என்றும் நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம் என்றும் விஜய் ஆண்டனி வருத்தம் தெரிவித்துள்ளார். இதை அறிக்கையாக அவர் பகிர்ந்துள்ளார்.
விஜய் ஆண்டனி, மிருணாளினி ரவி நடிப்பில் 'ரோமியோ' திரைப்படம் ரம்ஜான் பண்டிகைக்கு வெளியாக இருக்கிறது. இந்தப் படத்தின் பத்திரிகையாளர்கள் சந்திப்பு நேற்று முன் தினம் நடந்தது. படத்தில் முதலிரவில் நாயகி மது அருந்துவது போல வெளியாகி இருந்த போஸ்டர் பற்றி விஜய் ஆண்டனியிடம் கேள்வி எழுப்பப்பட்டது.
இதற்கு விஜய் ஆண்டனி, "குடிப்பது தவறுதான். ஆண், பெண் என யார் குடித்தாலும் தவறுதான். நம் நாட்டில் நீண்ட காலமாகவே குடி உள்ளது. திராட்சை ரசம் என்ற பெயரில் ஜீசஸ் கூட குடித்துள்ளார்" எனப் பேசினார். அவரது பேச்சு இணையத்தில் பரபரப்பை கிளப்பிய நிலையில், இதற்கு தமிழ்நாடு கிறிஸ்தவ சபைகளின் கூட்டமைப்பு கண்டனம் தெரிவித்துள்ளது.
விஜய் ஆண்டனி மன்னிப்பு கேட்க வேண்டும் இல்லை எனில் அவர் வீட்டின் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்துவோம் எனவும் அவர்கள் எச்சரித்தார்கள். இதற்கு அவர் அறிக்கை ஒன்றை வெளியிட்டு வேதனை தெரிவித்துள்ளார்.
அதில் அவர் கூறியிருப்பதாவது, 'நான் முன்தினம் ஒரு பத்திரிகையாளர் சந்திப்பில், திராட்சை ரசம் தற்போது கண்டுபிடிக்கப்பட்டது அல்ல, 2000 வருடங்களுக்கு முன்னதாகவே புழக்கத்தில் இருந்ததுதான், தேவாலயங்களிலும் பயன்படுத்தப்பட்டது ஏசுபிரான் பயன்படுத்தியிருக்கிறார் என்று கூறினேன்.
ஒரு பத்திரிக்கை நண்பர் என்னிடம் கேட்ட சில கேள்விகளை தொடர்ந்து நான் பேசியதை இணைத்து தவறாக அர்த்தப்படுத்தியதால் உங்களைப் போன்ற சிலர் மனம் புண்பட்டு இருக்கிறீர்கள் என்பது எனக்கு வேதனை அளிக்கிறது. நான் தவறாக எதுவும் சொல்லவில்லை. நீங்களும் தவறாக புரிந்து கொள்ள வேண்டாம். மக்களுக்காக ரத்தம் சிந்தி உயர்நீத்த, மதங்களுக்கு அப்பாற்பட்ட இயேசுவைப் பற்றி தவறாக சித்தரிக்க எனக்கு கனவிலும் வராது' எனக் கூறியுள்ளார்.