< Back
மாநில செய்திகள்
மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... கடைசி விவசாயி படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்
மாநில செய்திகள்

மது குடிக்க பணம் தராததால் ஆத்திரம்... 'கடைசி விவசாயி' படத்தில் நடித்த மூதாட்டியை அடித்து கொன்ற மகன்

தினத்தந்தி
|
5 Feb 2024 1:51 AM IST

இவர் கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார்.

மதுரை,

மதுரை மாவட்டம் உசிலம்பட்டியை அடுத்த ஆனையூரை சேர்ந்தவர் பால்சாமி. இவரது மனைவி காசம்மாள் (வயது 71). விவசாய வேலை பார்த்து வந்த இவர் கடைசி விவசாயி படத்தில் நடிகர் விஜய் சேதுபதியின் அத்தை கதாபாத்திரத்தில் நடித்து இருந்தார். இவருக்கு நமகோடி (52), தனிக்கொடி என 2 மகன்கள் உள்ளனர்.

இவரின் மூத்த மகன் நமகோடிக்கு திருமணமாகி, மனைவி பிரிந்து சென்றுவிட்டார். இதனால் போதைக்கு அடிமையான நமகோடி பெற்றோருடன் வசித்து வந்தார். நமகோடி மது குடிக்க பணம் கேட்டு அடிக்கடி தனது தாயார் காசம்மாளிடம் தகராறில் ஈடுபட்டு வந்ததாக தெரிகிறது.

இந்நிலையில் நேற்று அதிகாலையில் காசம்மாள் வீட்டில் தூங்கிக்கொண்டு இருந்தபோது அவரை நமகோடி தட்டி எழுப்பி, மது குடிக்க பணம் கேட்டு தொந்தரவு செய்துள்ளார். ஆனால் காசம்மாள் பணம் தர மறுத்துள்ளார். இதில் ஆத்திரம் அடைந்த நமகோடி, அங்கிருந்த கட்டையை எடுத்து காசம்மாளை சரமாரியாக தாக்கியுள்ளார்.

இதில் அவரது தலையில் பலத்த காயம் ஏற்பட்டு ரத்த வெள்ளத்தில் மயங்கி விழுந்து உயிரிழந்தார். அக்கம்பக்கத்தினர் இதுகுறித்து போலீசாருக்கு தகவல் தெரிவித்தனர். அவர்கள் அங்கு வந்து காசம்மாளின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். பின்னர் அந்த பகுதியில் தலைமறைவாக இருந்த நமகோடியை போலீசார் கைது செய்தனர்.

மேலும் செய்திகள்