தமன்னா நடனத்தில் ஆபாசம்: தணிக்கை குழுவை சாடிய நடிகர் மன்சூர் அலிகான்...!
|இப்படி கெடுபிடி கொடுத்தால் எப்படி படம் எடுக்க முடியும்? என்று நடிகர் மன்சூர் அலிகான் தணிக்கை குழுவை சாடியுள்ளார்.
மன்சூர் அலிகான் நடித்துள்ள 'சரக்கு' படம் தணிக்கை குழு சர்ச்சையில் சிக்கி உள்ளது. இதுகுறித்து மன்சூர் அலிகான் கூறும்போது, "சரக்கு படத்தில் நிறைய காட்சிகளை சென்சார் அதிகாரிகள் நீக்க சொல்கிறார்கள். பெரிய படத்துக்கு ஒரு மாதிரியாகவும், சிறிய படங்களுக்கு ஒரு மாதிரியாகவும் சென்சார் வாரியம் செயல்படுகிறது.
'சரக்கு' படத்தில் திருநங்கைகளுக்கு மரியாதை தரும் வகையில் வைத்துள்ள ஒரு பாடல் ஆபாசத்தை தூண்டுகிற வகையில் இருக்கிறது என்றும், பாடலில் நிறைய காட்சிகளை தூக்கவேண்டும் என்றும் சொல்கிறார்கள்.
'ஜெயிலர்' படத்தில் இடம்பெற்ற 'காவாலா' பாடலுக்கு தமன்னா ஆடுவது ஒரு மாதிரி இல்லையா? அவரது நடனம் ஆபாசமாகவும், கேவலமாகவும் இருந்தது. அதற்கு எப்படி அனுமதி கொடுத்தனர்.
தமன்னாவின் நடனத்தை அனுமதிக்கும் சென்சார் போர்டு, பொது நோக்கத்தோடு படம் எடுக்கும் எனக்கு அனுமதி வழங்க மறுக்கிறது. படத்தில் இடம்பெற்றுள்ள வாச்சாத்தி, கூடங்குளம், இலங்கை பிரச்சினை, மின்னணு வாக்குப்பதிவு எந்திரம் என்றெல்லாம் பேசவேண்டாம் என்கின்றனர்.
கிட்டத்தட்ட 30-க்கும் மேற்பட்ட காட்சிகளை நீக்க சொல்கிறார்கள். இதை செய்தால் படமே இருக்காது. இப்படி கெடுபிடி கொடுத்தால் எப்படி படம் எடுக்க முடியும்?" என்று கொந்தளித்துள்ளார்.