< Back
சினிமா செய்திகள்
என்.டி. ராமராவின் பேரனான நடிகர் நந்தமுரி தாரக ரத்னா காலமானார்
சினிமா செய்திகள்

என்.டி. ராமராவின் பேரனான நடிகர் நந்தமுரி தாரக ரத்னா காலமானார்

தினத்தந்தி
|
19 Feb 2023 1:53 PM IST

பிரபல தெலுங்கு பட நடிகர் நந்தமுரி தாரக ரத்னா மாரடைப்பால் காலமானார்.


ஐதராபாத்,

தெலுங்கு திரையுலகின் பிரபல நடிகர் நந்தமுரி தாரக ரத்னா (வயது 39). முன்னாள் முதல்-மந்திரி சந்திரபாபு நாயுடு தலைமையிலான தெலுங்கு தேச கட்சியில் இணைந்து கட்சி பணியாற்றி வந்து உள்ளார்.

ஆந்திர பிரதேசத்தின் சித்தூர் மாவட்டத்தில் கடந்த ஜனவரி 27-ந்தேதி தனது உறவினரான நர லோகேசுடன் இணைந்து, கட்சிக்காக நடைபயணம் ஒன்றை அவர் மேற்கொண்டார். அவர் திடீரென வழியிலேயே மயங்கி விழுந்து உள்ளார். இதனால், தொண்டர்கள் அதிர்ச்சி அடைந்தனர்.

இதன்பின்னர், அவர் பெங்களூருவில் உள்ள நாராயணா ஹிருதாலயா மருத்துவமனையில் சேர்க்கப்பட்டார். மாரடைப்பு ஏற்பட்டு 23 நாட்களாக சிகிச்சை பெற்ற நிலையில், உடல்நலம் பாதித்து அவர் காலமானார்.

இவருக்கு ஆலக்யா ரெட்டி என்ற மனைவியும், ஒரு மகளும் உள்ளனர். இவரது தந்தை நந்தமுரி மோகன் கிருஷ்ணா. தெலுங்கு திரையுலகில் பிரபல ஒளிப்பதிவாளராக அறியப்படுபவர்.

மறைந்த தாரக ரத்னா, பிரபல தெலுங்கு திரைப்பட நடிகர் மற்றும் ஆந்திர பிரதேச முன்னாள் முதல்-மந்திரியான என்.டி. ராமராவின் பேரன் ஆவார். தெலுங்கில் சூப்பர் ஸ்டார் எனப்படும் நந்தமுரி பாலகிருஷ்ணாவின் மருமகனும் ஆவார்.

ரத்னாவின் காதல் திருமணத்திற்கு பெரிய ஆதரவளித்தவர். அந்த வகையில், ரத்னாவின் உடல்நலம் பாதித்ததும் பெங்களூருவிலேயே தங்கி அவர் நலம் பெறும் வரை நந்தமுரி பாலகிருஷ்ணா உடனிருந்து உள்ளார். பிரபல நடிகர்களான ஜூனியர் என்.டி.ஆர். மற்றும் கல்யாண் ராம் ஆகியோர் இவரது உறவினர்கள் ஆவர்.

அவரது மறைவுக்கு நடிகர்கள், ரசிகர்கள் மற்றும் அரசியல்வாதிகள் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். அவரது உடல் ஐதராபாத் நகரில் மொகிலா பகுதியில் உள்ள அவரது வீட்டுக்கு இன்று காலை கொண்டு செல்லப்பட்டது.

இதன்பின்பு, மாலை 4 மணிவரை பிலிம் சேம்பரில் பொதுமக்கள் அஞ்சலிக்காக அவரது உடல் வைக்கப்படுகிறது. பின்னர், மாலை 5 மணியளவில் பிலிம்நகரில் உள்ள மகாபிரஸ்தனம் நோக்கி அவரது இறுதி ஊர்வலம் நடைபெற உள்ளது.

மேலும் செய்திகள்