'பொன் ஒன்று கண்டேன்' படம் குறித்து வருத்தம் தெரிவித்த வசந்த் ரவி
|படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம் என்று வசந்த் ரவி தெரிவித்துள்ளார்.
சென்னை,
பிரியா இயக்கத்தில் 'பொன் ஒன்று கண்டேன்' படம் உருவாகியுள்ளது. இந்த படத்தில் அசோக் செல்வன் மற்றும் ஐஸ்வர்யா லெட்சுமி முக்கிய கதாபாத்திரங்களில் நடித்துள்ளனர். மேலும் ஜெயிலர் படத்தில் ரஜினியின் மகனாக நடித்திருந்த வசந்த் ரவியும் இதில் நடித்துள்ளார். யுவன் சங்கர் ராஜா இசையமைத்துள்ளார். விரைவில் படத்தின் ரிலீஸ் குறித்த அதிகாரபூர்வ அறிவிப்பு வெளியாக உள்ளதாக தகவல்கள் வெளியானது.
இந்நிலையில், இந்த படம் திரையரங்குகளில் வெளியாகாது எனவும் நேரடியாக தனியார் தொலைக்காட்சி ஒன்றில் வெளியாகும் எனவும் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.
இந்நிலையில், இந்த அறிவிப்பு வருத்தம் அளிப்பதாக உள்ளது என தனது எக்ஸ் தளப்பதிவில் வசந்த் ரவி தெரிவித்துள்ளார். அதில்,
"அதிர்ச்சியளிக்கிறது. இது உண்மையா? குறிப்பாக புகழ்பெற்ற முன்னணி தயாரிப்பு நிறுவனமான ஜியோ ஸ்டுடியோஸிலிருந்து இந்த அறிவிப்பு வெளியாகியுள்ளது.
அசோக் செல்வன், ஐஸ்வர்யா லட்சுமி, பிரியா, யுவன் ஷங்கர் ராஜா, மற்றும் படக்குழுவினருடன் எந்த விதத்திலும் தொடர்பு கொள்ளாமல், பொன் ஒன்று கண்டேன் தனியார் தொலைக்காட்சியில் வெளியாகவுள்ள அறிவிப்பை பார்ப்பது மிகவும் வேதனையாகவும் வருத்தமாகவும் உள்ளது.
இந்தபடம் படத்துக்காக நாங்கள் கடுமையாக உழைத்துள்ளோம். இந்த அறிவிப்பு ஒட்டுமொத்த படக்குழுவிற்கும் தெரிவிக்கப்படாமல் நடந்துள்ளது. படக்குழுவிற்கு இது பற்றி சுத்தமாக தெரியவில்லை" என வருத்தத்துடன் பதிவிட்டுள்ளார்.