இந்த திரைகாவியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும்: தங்கலான் குறித்து சிந்தனை செல்வன் கருத்து
|நடிகர் விக்ரமின் நடிப்பு உலக தரத்தை விஞ்சுகிறது என்று சிந்தனை செல்வன் தெரிவித்துள்ளார்.
சென்னை,
இயக்குனர் பா. ரஞ்சித் இயக்கத்தில் விக்ரம், பார்வதி, மாளவிகா மோகனன், பசுபதி மற்றும் பலர் நடிப்பில் உருவாகி உள்ள திரைப்படம் 'தங்கலான்'. ஸ்டூடியோ கிரீன் நிறுவனம் தயாரித்துள்ள இந்த திரைப்படம் கடந்த 15-ம் தேதி சுதந்திர தினத்தை முன்னிட்டு வெளியானது. ஜி.வி. பிரகாஷ் இசையமைத்துள்ள இப்படம், விமர்சன ரீதியாகவும், வசூல் ரீதியாகயும் ரசிகர்களிடையே நல்ல வரவேற்பை பெற்று வருகிறது. தங்கலான் முதல் நாளில் மட்டும் உலகளவில், 26 கோடிக்கு மேல் வசூலித்துள்ளது.
இந்த நிலையில், தங்கலான் திரைப்படம் குறித்து விசிக பொதுச்செயலாளர் சிந்தனை செல்வன் வெளியிட்டுள்ள எக்ஸ் தளப்பதிவில் கூறியிருப்பதாவது:-
தங்கலான் திரைப்படம் பார்த்தேன். மிக மிக சிறப்பு. சனாதன மதிப்பீடுகளில் புதைந்து கிடந்த நிலவுடமை சமூக கட்டமைப்பில் பூர்வகுடிகளின் நிலம் எவ்வாறு அவர்களிடமிருந்து வன்முறையாலும் வஞ்சகத்தாலும் பறிக்கப்பட்டது என்பதை மிகத்துணிச்சலாக பதிவு செய்திருக்கிறார் இயக்குனர் பா.ரஞ்சித்.
நடிகர் விக்ரமின் நடிப்பு உலக தரத்தை விஞ்சுகிறது. இயற்கையோடு இணைந்தவாழ்வு, அதன் சம நிலையை பேணிக்காப்பதே தொல்தமிழர் வாழ்வியல் கோட்பாடு என ஆரத்தியின் மூலம் வலியுறுத்தப்படும் அறம் மிக மிக நுட்பமானது. மின்னும் தங்கம் ஒரு மஞ்சள் பேய் என அறைந்து சொல்கிறது படம்.
காலனியாதிக்கத்தின் வரவு நம் வர்க்க ஒடுக்குமுறையின் வடிவத்தை சற்று மாற்றியதே தவிர சுரண்டலும் ஒடுக்குமுறையும் மாறவில்லை என்பதை காத்திரமாய் சொல்லும் இந்த திரைகாவியத்தை எவ்வளவு பாராட்டினாலும் தகும். இவ்வாறு அதில் கூறப்பட்டுள்ளது.