சிறு படங்களுக்கு நியாயம் இல்லை - டைரக்டர் சீனு ராமசாமி
|சிறு படங்களுக்கு இங்கே நியாயம் இல்லை என்று டைரக்டர் சீனு ராமசாமி வலைத்தளத்தில் வெளியிட்டுள்ள பதிவில் தெரிவித்துள்ளார்.
நடிகர் விஷால் சமீபத்தில் நிகழ்ச்சியொன்றில் பேசும்போது "ரூ.1 கோடியில் இருந்து ரூ.4 கோடி வரை பணம் வைத்துக்கொண்டு படம் தயாரிக்க யாரும் வரவேண்டாம். மீறி படம் எடுத்தால் சல்லிக்காசு கூட திரும்ப வராது.
அந்த பணத்தில் படம் எடுக்காமல் நிலம் வாங்கி போடுங்கள். ஏற்கனவே 120 படங்கள் திரைக்கு வர முடியாமல் முடங்கி கிடக்கின்றன'' என்றார். விஷால் கருத்துக்கு சில நடிகர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர்.
ஆனால் விஷாலுக்கு பிரபல டைரக்டர் சீனு ராமசாமி ஆதரவு தெரிவித்து உள்ளார். இதுகுறித்து வலைத்தளத்தில் சீனுராமசாமி வெளியிட்டுள்ள பதிவில், "நடிகர் விஷால் சொல்வதில் ஒரு உண்மை உண்டு. சிறு படங்களுக்கு இங்கே நியாயம் இல்லை. சிறுபடங்களை வெளியிட யார் உண்டு. முதல் மூன்று நாள் அவகாசம் தான். சிறுபடங்களுக்கு தியேட்டரில் முதல் ஷோ கூட்டமில்லை எனில் தூக்கப்படும். தியேட்டர் வியாபாரம் பெரிய படங்களுக்கு சாதகமாக வைத்துக்கொண்டு அதில் சிறிய படங்களை வெளியிடுவது படுகொலைக்கு சமம்.
பல தியேட்டரில் சைக்கிள் பார்க்கிங்கே இல்லை அப்புறம் சின்ன படத்தை யார் வாழ விடுவார்கள்? அன்னக்கிளி, சேது போன்ற படங்களின் காலம் பொற்காலம்'' என்று கூறியுள்ளார்.