'விருதுகள் மீது நம்பிக்கை இல்லை' -நடிகர் விஷால்
|விஷால் நடித்துள்ள 'மார்க் ஆண்டனி' படம் விநாயகர் சதுர்த்தியில் திரைக்கு வருகிறது
ஆதிக் ரவிச்சந்திரன் இயக்கத்தில் மார்க் ஆண்டனி படத்தில் விஷால் நடித்துள்ளார். இதில் எஸ்.ஜே.சூர்யா, ரித்து வர்மா ஆகியோரும் நடித்துள்ளனர்.
இந்த நிலையில் விஷால் அளித்துள்ள பேட்டியில், "கொரோனாவுக்கு பிறகு தியேட்டர்களுக்கு வந்து படம் பார்ப்போர் குறைந்துள்ளனர். முன்பெல்லாம் தியேட்டரில் பத்து படங்கள் பார்த்தவர்கள் இப்போது ஆறு, ஏழு படங்களைத்தான் பார்க்கிறார்கள், ஓ.டி.டி தளங்களில் படங்களை பார்க்க ஆர்வப்படுகின்றனர். நான் நடித்துள்ள மார்க் ஆண்டனி படம் இரண்டு கால கட்டங்களை உள்ளடக்கிய கதையம்சத்தில் தயாராகி உள்ளது. இதில் நானும் எஸ்.ஜே.சூர்யாவும் இரட்டை வேடங்களில் நடித்து இருக்கிறோம். சிறப்பான படமாக வந்துள்ளது. விநாயகர் சதுர்த்தியில் திரைக்கு வருகிறது.
கிளைமாக்ஸ் காட்சியை எடுத்தபோது விபத்தில் இருந்து அதிர்ஷ்டவசமாக உயிர் தப்பினேன். விருதுகள் மீது எனக்கு நம்பிக்கை இல்லை. மக்கள் தரும் ஆதரவுதான் பெரிய விருது.
நான் சினிமாவுக்கு வந்து 19 வருடங்கள் ஆகிறது. முதல் படத்தை போலவே ஒவ்வொரு படத்திலும் நடித்து வருகிறேன். விஜய் படத்தில் நடிக்க அழைத்தனர். வேறு படங்களில் எனக்கு நடிக்க வேண்டி இருந்ததால் நடிக்க முடியவில்லை. விஜய்யை வைத்து படம் இயக்க வேண்டும் என்று விருப்பம் உள்ளது'' என்றார்.